மீண்டும் ஒரு காதல் கதை – 3

சில மாதங்களில் எங்களுக்குள் பழக்கவழக்கங்களில் மாறுபாடு வரத்தொடங்கியிருந்தது. நான் அவளை ஒருமையிலும், ‘டி’ போட்டும் அழைக்கத் தொடங்கியிருந்தேன். சில சமயங்களில் தொட்டும் பேசியிருந்தேன். ஆனால் பல காரணங்களுக்காக வீட்டிற்கு பெரும்பாலும் வரமாட்டாள். நானும் அதைத் தவிர்த்துவிடுவேன்.

“ரவி, உங்க சைக்கிளில் என்னைக் கூட்டிக்கொண்டு போனதேயில்லை!”

“போய்விட்டால் போச்சு!” சைக்கிள் எடுத்துவந்தேன். நான் அவளை பின்சீட்டில் உட்காரச்சொல்ல. அவள், “ஏன் நீங்க உட்காருங்களேன். நான் ஓட்டிட்டு வர்றேன்? பொம்பளங்க ஆம்பளைங்களை பின்னாடி உட்காரவைச்சு சைக்கிள் ஓட்டக்கூடாதா?”

நான் மெதுவாக ப்ளடி ஃபெமினிஸம் என்றேன்.

“என்ன சொன்னீங்க.”

“ம்ம்ம். ஒன்னும் சொல்லலை…”

“சொல்லுங்க ரவி…”

“ப்ளடி ஃபெமினிஸம்னு சொன்னேன்.”

“தாங்ஸ், சொன்னதுக்கு. இனிமே அப்பிடி சொல்லாதீங்க”

நாங்க இரண்டுபேரும் காதலிக்கிறோம்னு சொல்லிக்கலையே தவிர அதைத்தான் பண்ணிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் அவளுக்கு என் பர்ஸனல் விஷயங்கள் தெரியாது. நானும் அவள் கேட்டால் சொல்லிக் கொள்ளலாம்னு விட்டுட்டேன். சில சமயங்களில் சூழ்நிலை எங்களை மீறியிருக்கிறது. ஆனால் சில சமயங்களில் நானும் சில சமயங்களில் அவளும் சமாளித்து நகர்ந்திருக்கிறோம். அடுத்த முறை பார்க்கும் பொழுது சிறிது சிரிப்பாய் இருக்கும். ஆனால் சிறிது நேரத்தில் சகஜமாகிவிடும்.

ஒருநாள் மதுமிதா என்னிடம் வந்து, “ரவி, கோயிலுக்குக் கூட்டிட்டு போங்களேன்…”

கோவிலில் வைத்து, “ரவி, எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?”

“பிடித்திருக்கு…!” நான் மேலும் சொல்ல தொடங்கும் முன், “எனக்கு அது போதும், ஹோட்டலுக்குக் கூட்டிட்டு போய் ஃபுல் மீல்ஸ் வாங்கிக் கொடுங்க.”

நான் சிரித்துக்கொண்டே “அது என்ன ஃபுல் மீல்ஸ்?”

“எனக்கு இன்னிக்கு நிறைய சாப்பிடணும் போல இருக்கு…”

சாப்பிட்டதும் எனக்கு தூக்கம் வருகிறது, நான் ஹாஸ்டலுக்கு போகிறேன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அடுத்த நாள் காலையிலேயே வீட்டிற்கு வந்திருந்தாள். உட்காரச்சொல்லிவிட்டு நான் குளிக்கக் கிளம்பினேன். குளித்துவிட்டு வந்து பார்த்தால் தூங்கிக் கொண்டிருந்தாள். நான் அவளை எழுப்பி, “ஏய் சாப்பிட்டுட்டியா?”

“இல்லை…”

“சரி வா சாப்பிடலாம், உனக்கும் சேர்த்துத்தான் ரொட்டி சுட்டேன்.”

சாப்பிட உட்கார்ந்தவள், சிறிது நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி யோசனை?”

“என்னவோ கேட்கணும்னு நினைச்சேன் மறந்திட்டேன்… ஆங்… ஞாபகம் வந்திருச்சு. என்னைய நீங்க ஒரு படம் வரைஞ்சு தரணும்.”

“நான் பொண்ணுங்களை ட்ரெஸ் போட்டு படம் வரையறதில்லை…” சொல்லிவிட்டு அவளைப் பார்த்து சிரித்தேன்.

அவள் நேரடியாய் “இதுக்கு முன்னாடி அதுமாதிரி வரைஞ்சிருக்கீங்களா?”

“ம்ம்ம், இரண்டு மூணுதரம் வரைஞ்சிருப்பேன். நான் தனியா ஓவியம் படிச்சப்ப, எல்லா ஸ்டுடண்ட்சும் வரையணும். எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் ஓவியம் மட்டுமே கண்ணாக இருக்கணுங்கறதுக்காக அப்படி ஒரு பயிற்சி.”

சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்துவிட்டு, “ரவி, உங்களால உணர்ச்சிவசப்படாம வரைய முடியும்னா, நீங்க என்னையும் வரையலாம். எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது.”

ஆனால் என்னால் அன்று உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை. நிச்சயமாய் அவள் ஓவியக்கல்லூரி மாடல் இல்லை. மேலும் அந்த ஓவியக் கல்லூரி மாடலை நான் நேசித்திருக்கவில்லை.

இடையில் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன், “என்னாடி இது ஒன்னயுமே காணோம்…”

அதற்கு அவள், “என் உடல் வாகே அப்படித்தான்!” என்று சொன்னாள்.

அன்று சாயங்கால வேளை ஹாஸ்டலை காலி செய்துவிட்டு நேராக என் வீட்டிற்கே வந்து சேர்ந்தாள்.

“ரவி, இனிமேல் நான் ஹாஸ்டலில் தங்கவில்லை, உங்களுடனேயே தங்கிவிடுகிறேன். ஆனால் ஒன்று, நான் உங்கள் பர்ஸனல் வாழ்க்கைபற்றி எதுவும் கேட்கமாட்டேன், நீங்களும் என்னுடயதைப்பற்றி கேட்கக்கூடாது. நானாக உங்களை, என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளுமாறு கேட்க மாட்டேன். அதே போல் கல்யாணம் ஆனாலும் சரி, நீங்கள் சமைத்துப்போடவோ, துணிதோய்க்கவோ, வேறு உங்களுடைய வேலையைச் செய்யவோ என்னைக் கேட்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் என் பர்ஸனல் வாழ்க்கையை உங்களுடைய வாழ்க்கை பாதிக்ககூடாது. ஆறுமாதம் போல் சேர்ந்திருப்போம். பிடித்திருந்தால் கல்யாணம் செய்து கொள்வோம். இல்லையென்றால் நான் மீண்டும் ஹாஸ்டல் சென்றுவிடுகிறேன். இடையில் இருவருக்கும் உடன்பாடென்றால் செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி எனக்குப் பிரச்சனையில்லை.”

“திரும்ப ஹாஸ்டல் போறது கஷ்டமில்லை?”

“கஷ்டம்தான்; வலிக்கும்தான்; ஆனா இன்னொருத்தரை டிபண்ட்பண்ணி வாழாமல் இருக்கலாம். என்ன ஒன்னு இவ்வளவு நாள் கழித்தும் தப்பான ஒருத்தரை தேர்ந்தெடுத்துட்டோம்னு தான் கொஞ்சம் வருத்தமா இருக்கும். அதற்கென்ன பண்ணுவது. ஆனால் ஒன்று எக்காரணம் கொண்டும் நான் என் அம்மாவைப் போல் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன்.”

எனக்கு ஏண்டா இந்தக் கேள்விளைக் கேட்டோமென்று ஆயிற்று.

(தொடரும்…)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s