ஒரு காதல் கதை – 17 & 18

அத்யாயம் 17

காலையில், “யேய், காலேஜ் வரலை?”

“நீங்க போங்க, எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு, போறப்ப ஒரு சாவியை இங்க வைச்சுட்டு வெளியில பூட்டிட்டு போயிருங்க”

திரும்பவும் பதினைந்து நாள் கழித்து பார்த்ததால், அன்றைக்கு எல்லாருடனும் பேசிக்கொண்டிருந்து விட்டு, இந்த செமஸ்டர் எல்லாரும் என்னா புரோஜக்ட் செய்யப் போறாங்கன்னு கேட்டுக் கொண்டிருந்ததில். மூணு மணிநேரம் ஓடியதே தெரியவில்லை.

சாப்பிட கான்டீன் வந்தால், மாம்பழ கலர் பாவாடையும் கருப்பு கலர் தாவணியும் போட்டுக்கிட்டு, ஷாம்பூ போட்ட குளிச்ச தலைமுடி பறக்க, நெத்தியல அழகா, சின்னதா ஒரு குங்குமப்பொட்டு வச்சுக்கிட்டு. சூப்பரா தேவதை மாதிரி இருந்தாள். அவளுடைய மாம்பழ நிற உடம்புக்கு அந்தக் கருப்பு தாவணி மிக அழகாக இருந்தது. இதுதான் நான் முதல் முறை அவள் தாவணி கட்டிப்பார்க்கிறேன்.

“தாஸ் வாயை மூடுங்க, ஈ எதுவும் உள்ளே போயிரப்போகுது. இப்பிடியா ஜொள்ளு உடறது.”

“ஏய் என்னன்னு கூப்பிட்ட?”

“தாஸ்னு… ஏன்?”

“ரொம்ப கொழுப்பு ஏறியிருக்கு நேத்தியிலேர்ந்து…”

“இனிமே அப்பிடித்தான், யாரும் பக்கதில் இல்லைன்னா செல்லமா தாஸ்தான்…”

“ஏய் இன்னிக்கு நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? அப்பிடியே தூக்கிட்டுபோய்…”

“பாருங்க, இனிமேல் தொட்டீங்கன்னா கடிச்சுடுவேன்…, இன்னிக்கு நாலே காலுக்கு உங்க கிளாசுக்கு வருவேன். என்னைக் கூட்டிக்கிட்டு கோயிலுக்கு போகணும், உங்க புரோஜக்டை தூக்கி குப்பையில் போடுங்க.”

“நீங்க சொல்லீட்டீங்கன்னா சரிதான் மேடம்.”

அவள் என்னைப் பார்க்க வரும் பொழுது, புதிதாய் சேர்ந்திருந்த அவள் கிளாஸ் மாணவி ஒருத்தி (கேரளா) என்னிடம் வந்து நோட்ஸ் கேட்டுக் கொண்டிருந்தாள். கொடுமையென்னவென்றால் அவளே ஜோக் சொல்லி அவளே சிரித்துக் கொண்டிருந்தாள். நானும் தப்பா நினைக்கக்கூடாதேன்னு சிரித்து வைத்தேன். அவள் சென்ற பிறகு என்னிடம் வந்தாள் அகிலா.

“அவகிட்ட சிரிச்சு, சிரிச்சு அப்படியென்ன பேச்சு, ஒரு நாள், எனக்கும் அவளுக்கும் சண்டையாயிருச்சு தெரியுமா. சரி அவ என்ன கேட்டா?”

“வேறென்ன நோட்ஸ்தான்…, சரி என்ன சண்டை?”

“அதெல்லாம் பொம்பளங்க சமாச்சாரம், நான் பாத்துக்கிறேன். அவளுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?”

“வேறென்ன, இங்க கேட்டா கிடைக்காது. என் வீட்டுக்கு வந்து கேளு. அதுவும் இப்பெல்லாம் ஒரு பொண்ணு வீட்டிலேயே இருக்கு. அதனால அவகிட்ட நான் எப்ப ·பிரின்னு கேட்டு சொல்றேன். அப்ப வந்து கேளுன்னு சொன்னேன்.” சொன்னதும்தான் தாமதம் விருட்டென்று கிளம்பி வெளியே ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.

நான் மெதுவாக சார்லசின் வண்டியை எடுத்துக் கொண்டு அவள் பின்னால் வந்து நிறுத்தி. “ஏய் இந்தாடி, ஏறிக்கோ” சொன்னதும் ஏறிக்கொண்டாள். ஆனால் வண்டியில் எனக்கும் அவளுக்கும் ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது.

நாங்கள், கோயிலுக்கு போனோம். நான் கடவுளை நம்புகிறவன் இல்லையென்றாலும் அவளுடன் கோயிலுக்கு உள்ளே வந்தேன். குருக்கள் விபூதி தந்ததும் வாங்கிவிட்டு கையிலே வைத்திருந்தேன். என்னைப் பற்றி தெரியுமாதலால் அவள் கையில் இருந்த விபூதியை என் நெற்றியில் பெரிதாக வைத்துவிட்டாள். பிறகு நாங்கள் ஹோட்டலுக்கு வந்தோம். ஆனால் அதுவரை அவள் என்னிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை.

ஹோட்டலில் என் பக்கத்தில் அவள் உட்கார்ந்ததும், அவளிடமிருந்து ஒரு வாசனை வீசியது. அவள் வைத்திருந்த மல்லிகைப்பூவும், அவள் வேர்வையும் சேர்ந்த அந்த வாசனையால் தடுமாறிய நான் அவள் தோளைச் சுற்றி கையை போட்டேன். என் கையை எடுத்து கீழே வைத்துவிட்டு, “இதுக்கு மட்டும் நான் வேண்டுமாக்கும், அந்தக் கேரளாக்காரி மேல போய் போடவேண்டியது தானே?”

நான் அதற்குப் பிறகு அவளிடம் எதுவும் பேசிவில்லை. அவளை திரும்ப கொண்டுவந்து ஹாஸ்டலுக்கு பக்கத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

அதற்கு பிறகு இரண்டு நாள் நான் அவளிடம் பேசவில்லை, அவள் என்னை பார்க்க வந்தாலும் நான் முகத்தை திருப்பிக்கொண்டு வந்துவிட்டேன். இரண்டு மூணு முறை என்னிடம் பேசமுயன்றாள். நான் பேசாமல் நகர்ந்து விட்டேன். அடுத்தநாள் சனிக்கிழமை வீட்டுக்கே வந்துவிட்டாள். நேராக என் எதிரில் வந்து நின்று, இடுப்பில் கையை வைத்துக் கொண்டு, “இப்ப நான் என்ன பண்ணனுங்கிறீங்க?”

நான் உடனே, “சேலை கட்ட தெரியும்னா, போய் கட்டிக்கிட்டுவா, ஒரு வேலையிருக்கு…”

அத்யாயம் 18

அரைமணி நேரத்தில் நாங்கள் மதுரை-திருச்சி ரோட்டில் பைக்கில் போய்க்கொண்டிருந்தோம் ஆனால் இடைவெளி மட்டும் அப்படியே இருந்தது.

“நாம இப்ப எங்க போறோம்?”

“எங்கப்பாவைப் பார்க்க…”

“எதுக்கு?”

“நம்ம விஷயத்தை சொல்லப்போறோம்…”

“இங்கப் பாருங்க, அதுக்கு முன்னாடி உங்க அம்மாகிட்ட சொல்லலாம்ல, உங்கப்பா கோபக்காரருன்னு வேற சொல்றீங்க. உங்கம்மாகிட்ட சொன்னா அவங்க நமக்கு உதவி பண்ணுவாங்கல்ல…”

“அம்மாவுக்கு எல்லாம் தெரியும்…” நான் சொல்லி நிறுத்தினேன்.

“தாஸ், கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க.”

நான் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தினேன். நேரே என்னெதிரில் வந்தவள்.

“என்ன சொன்னீங்க?”

“அம்மாவுக்கு எல்லாம் தெரியும்னு…”

“எல்லாம்னா?”

“எல்லாம் தான்.”

அவள் உடனே தலையில் அடித்துக் கொண்டு, பக்கத்தில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்தாள். ஐந்து நிமிஷம் இருக்கும். லேசாக சிரித்துக் கொண்டே என்னருகில் மீண்டும் வந்தவள்.

“என்ன தாஸ் இது, அம்மாகிட்ட எதையெல்லாம் சொல்றதுன்னு விவஸ்தையில்லை, நான் இனிமே உங்கம்மா முகத்தில எப்பிடி முழிப்பேன். அன்னிக்கு ஹாஸ்டல்ல என்னைய விட்டுட்டு போனதுக்கு பிறகு என்ன நடந்தது. உங்கம்மா கிட்ட எப்ப சொன்னீங்க, அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?”

“அன்னிக்கு என்கிட்ட அப்பிடி நடந்துக்கிட்டதுக்காக, எனக்கு உம்மேல துளிகூட கோபமில்லை, உனக்கும் அப்படித்தான்னு தெரியும். ஆனா அன்னிக்கு நைட்டு தூக்கமே வரலை எனக்கு, ஒரே கெட்ட கெட்ட கனவா வந்தது. ஏற்கனவே சின்ன பெண்ணை ஏமாத்திட்டதா ஒரு கில்டி ஃபிலிங். கனவுல இந்தியன் தாத்தா வந்து, ‘செய்வியா, செய்வியா’ ன்னு கத்தியில குத்துறார். ஒரு பையன் வந்து, ‘நீ இந்த செமஸ்டர்ல மூணு அரியர்’னு சொல்றான். நான் ரொம்பவே பயந்திட்டேன். இடையில நீ வேற கனவுல வந்து சிரிக்கிற. முதல் நாள் சமாளிச்சிட்டு காலேஜ் வந்தேன். நீ வேற விடாம திரும்பத் திரும்ப வந்து என்னைப் பார்த்துக்கிட்டிருந்தியா… அதான் அடுத்த நாள் நேரா போய் அம்மாகிட்ட சொன்னேன்.”

“என்னன்னு சொன்னீங்க?”

“அம்மாவுக்கு ஏற்கனவே இதப்பத்தி தெரியும், நானும் அம்மாவும் பேசிவச்சிட்டுத்தான் அன்னிக்கு உன்னைய பூஜைக்கே வரச்சொல்லியிருந்தோம். அதானால நான் அம்மாகிட்ட நேராப் போய், ‘நைனாகிட்ட பேசு’ ன்னு சொன்னேன். அம்மா அதுக்கு என்னடா அவசரம்னு கேட்டாங்க; நான் அவசரம் தான்னு சொல்லிட்டு தலையை குனிஞ்சுகிட்டேன். அம்மாவுக்குப் புரிந்துவிட்டது…”

“அத்தே என்ன சொன்னாங்க?”

“நான் அப்பவே நினைச்சேன்னு சொன்னாங்க”. நான் சொல்லிவிட்டு சிரித்தேன். பக்கத்தில் வந்து தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துவிட்டு, “பண்ணியதெல்லாம் நீங்க, கெட்டபேரு மட்டும் எனக்கா? அத்தே என்னைத்தான் தப்பா நினைச்சிருப்பாங்க. சரி அது என்னா கையில, என்னவோ வைச்சிருக்கீங்க?”

“உனக்குத்தான்” சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த தங்கச் சங்கிலியை அவளிடம் கொடுத்தேன்.

“ஐ, எனக்கா சூப்பராயிருக்கு. உண்மையை சொல்லுங்க உங்களுக்கு இதெல்லாம் தோணாதே, யார் சொன்னாங்க வாங்கிக்கொடுக்கச் சொல்லி?”

“யாரும் சொல்லலை, அம்மாதான் இதை கொடுத்து, அகிலாகிட்ட கொடுன்னு சொன்னாங்க.”

நான் சொன்னதும், அதுவரை அவள் கையில் வைத்திருந்த லாப்டாப்பை என் கையில் திணித்து, “நீங்க இதையே கட்டிக்கிட்டு அழுங்க, உங்களையெல்லாம் நான் கல்யாணம் செய்துக்க முடியாது.”

(தொடரும்…)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s