தொடர்கதை – தேவதையின் காதலன் (1)(Story)

பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரியில் காலடி எடுத்து வைக்க வேண்டிய தருணம்; நான் சேர இருந்த காலேஜ் ஒரு சின்ன காலேஜ் எனக் கேள்வி; மொத்தமே நானூறு பேர்தான் படிப்பதாகத் தெரிந்தது. அன்று முதல் நாள் கல்லூரி; என் பெற்றோர் உடன் வருவதாகச் சொன்னதை மறுத்து, நான் மட்டும் வந்திருந்தேன், கல்லூரி தொடக்க விழாவுக்கு.

சின்ன காலேஜ்; ஒரேயொரு கட்டிடம்தான் இருந்தது. மருந்துக்குக் கூட மரங்களைக் காணோம். என்னடா இது அடுத்த மூன்று ஆண்டுகளை இங்கேதான் கழிக்க வேண்டுமாயென்று நான் நினைத்துக்கொண்டே காலேஜுக்குள் நுழைகிறேன். அங்கே நின்று கொண்டிருந்த ராஜேஷையும் பிரபுவையும் பார்த்து எனக்கு ஆச்சர்யம்.

“மாப்ளே, நீங்க எங்கடா இங்க?”

“அய்யோ தாஸு நீயுமா! எனக்குக் குருவி அப்பயே சொன்னிச்சு, என்னடா இது உள்ள வர்றவன் மூஞ்சையெல்லாம் பார்த்தா, எல்லாருமே பப்பு மாதிரி இருக்கானுங்களே, என்னடா இது ஒன்னுமே தேறாது போலிருக்கே, நம்மளுக்கு கூட்டே கிடைக்காதோன்னு நினைச்சேன். மாம்ஸ் நீ வந்திட்டேல்ல, தாராளம் மாமே தாராளம்.” – ராஜேஷ்.

“டேய் என்னடா இது, இரண்டு பேருமே நல்ல மார்க் தானே, இங்க ஏண்டா வந்தீங்க, சரி சரி, எங்க வீட்டு வில்லன் மாதிரிதான் உங்க வீட்டிலையுமா?”

“பின்ன என்னடா, நீயே வந்திருக்க; நாங்க வர்றதுக்கு என்ன? மாமே சூப்பர் ஃபிகருங்கடா, எங்கப்பன் என்னடா இப்படியொரு பிசுனாரி காலேஜில் சேர்த்துட்டானேன்னு நினைச்சு கவலைப்பட்டேன்; சும்மா எங்கப்பார்த்தாலும் கேரளத்து ஃபிகருங்களாயிருக்குது. எங்க மனசு இப்ப எங்ககிட்ட இல்லப்பா!!” இருவரும் பெருமூச்சு விட்டார்கள்.

“கொம்மாஞ்சக்க, அப்பிடியா சொல்ற, உனக்குச் சொன்ன குருவி எனக்கும் சொன்னிச்சின்னு வைச்சுக்கோயேன்; அதான் காலையிலே வர்றப்பவே அட்ரஸ் இல்லாம லெட்டர் எழுதி எடுத்துட்டு வந்திருக்கேன். காலையிலே பஸ்ஸில் வர்றப்ப அப்பிடியே ஒரு கவிதை மின்னலா தோன்றி மறஞ்சுச்சு பாரு; அப்பவே நினைச்சேன் நம்ம லெட்டருக்கு இன்னிக்கு வேலை வந்திருச்சுன்னு. அந்தக் கவிதையை சொல்றேன் கேக்குறியா?”

“பங்காளி! ஆரம்பிச்சிட்டான்டா இவன்; வந்த முத நாளே ஆரம்பிச்சிட்டான். அங்க ஸ்கூல்ல இவன்கூட சேர்ந்து, முட்டிக்கால் போட்டதுதான் மிச்சம். இங்கயாவது திருந்தலாம்னு பார்த்தா தேடிப்பிடிச்சு சேர்ந்திருக்காண்டா!,” பிரபு.

“ஆனாலும் பரவாயில்லை மாமூ, நீ சொல்லு.”

===
“கால் நடந்து வரும்
அஜந்தா குகை ஓவியமோ
நீதான்
தேன் கொண்டு தரும்
கண்ணதாசன் காவியமோ

சித்தன்னவாசல் சிற்பமோ
நீதான்
முத்திரை பதிக்கும்
சித்திரை மழையோ

கம்பனாய் இருந்தால்
பாடியிருப்பேன் உன்னை
வர்மனாய்(ரவி) இருந்தால்
வரைந்திருப்பேன்,
நானாய் இருப்பதால்
வாடியிருக்கிறேன்

என் இதயமிருந்தமிடமின்று
வெற்றாய்,
பறந்து விட்டது உன்னிடம்
சிட்டாய்.

வைத்துக்கொள்ளடி பெண்ணே
உன்னை மட்டுமே நினைத்து,
உன் பெயரைச் சொல்லித் துடித்து
உனக்காகவே இருக்கும் அதை
நான் வைத்து
என்ன செய்வது,
நீயே வைத்துக்கொள்! ”
===

“எப்பிடிடா மாப்ள இருக்கு?”

“மாம்ஸ் இதெல்லாம் இருக்கட்டும், நீ காலேஜ் வந்தாவது திருந்தாலாம்னு இருக்கியா, இல்லை பழையபடியேதானா?” கேட்டுவிட்டு முறைத்தான் பிரபு.

“மாம்ஸு இவனுக்குப் பொறாமைடா; நீ கலக்குடா மச்சி. ஆனா ஸ்கூல் மாதிரிதான் நடந்துக்கணும். மற்றவங்க ஆளுங்களை தங்கச்சியாத்தான் பார்க்கணும். என்ன?” ராஜேஷ்.

எங்களுக்குள் வந்த முதல் நாளே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இது அணிசேரா ஒப்பந்தம் இல்லை, அணிமாற்றா ஒப்பந்தம். நாங்கள் எல்லாம் வீட்டில் இருந்து வந்திருந்தோம். ஹாஸ்டலில் இருந்து மாணவர்கள் வரவேண்டிய பாக்கி இருந்தது. வந்தவுடன் ஏதோ நிகழ்ச்சியாம் அதன் பிறகு கிளாஸுக்குப் போகவேண்டியதுதான். காலேஜ் பஸ் வந்தது. முதலில் ஒரு தேவதைக் கூட்டம் இறங்கியது. நாங்கள் அழகான பெண்கள் எல்லாரும் எங்கள் பிரிவெடுத்திருக்க வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினோம்.

அந்த தேவதைக் கூட்டத்தின் இடையில்தான் என் தேவதையும் நடந்துவந்தாள். வெள்ளைக் கலர் சுடிதாரில் அவள், சராசரிக்கும் குறைவான உயரமாய், மாம்பழ நிறத்தில் இருந்தாள்; கையில் நோட்டொன்றை எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்; சிரித்துக் கொண்டே நடந்து வந்த அவள் ரஜினிகாந்தைப்போல் தலைமுடியைக் கோதிய போது, என் கவிதையைப் போல் என்னிடம் இருந்த ஏதோவொன்று இடம் மாறத் தொடங்கியிருந்தது.

அவளைப் பார்த்தவுடன் மனம் கவிதை எழுத தொடங்கியது,

===
தேவதைகள்
வானிலிருந்து
வருவதுண்டோ

உண்டென்றால்
அது நீயென்றால்,
தேவதையே உந்தன்
சிறகெங்கே?

இறக்கையில்லா
தேவதையாயினும்
இரக்கமுமாயில்லை

வரமளிக்குமாமே தேவதைகள்
வரம்வேண்டாம், ஒருமுறை
திரும்பித்தான் பாரேன்

உன் கண்பார்வைக்காக
காத்திருக்கும்
அகலிகன் நான்

அய்யோ, இதென்ன
என் கால்கள்
தரையில் பரவ
மறுக்கிறதே,
நான் பறக்கத் தொடங்கிவிட்டேனோ?
நான் தேவதையின் தேவனாகிவிட்டேனோ?
===

மனம் முழுக்க அவள்தான் இருந்தாள், ராஜேஷும் பிரபுவும் என்னன்னவோ பேசினார்கள். எதுவுமே என் காதில் விழவில்லை. விழா முடிந்தது; நாங்கள் கிளாசிற்கு வந்தோம்; நாங்கள் புண்ணியம் செய்தவர்கள். அந்தக் தேவதைக் கூட்டம் அப்படியே என் வகுப்பில் வந்து உட்கார்ந்தது. எங்கள் வகுப்பில் முதல் இரண்டு பெஞ்சில் அவர்கள் உட்கார்ந்ததும், மற்ற சொம்புப் பசங்கள் எல்லாம் மீதமிருந்த முதல் பெஞ்சுகளில் உட்கார, பெயருக்கு ஏற்றமாதிரி நாங்கள் மாப்பிள்ளை பெஞ்சில் உட்கார்ந்தோம்.

முதல் வகுப்பு ஆரம்பித்தது, பாடம் நடத்த வந்த லெக்சரர் அனைவரையும் அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார். இடையில் அவர் பேசுவது கேட்காமல், அடிக்கடி பேசிக்கொண்டிருந்த பிரபுவின் மண்டையில் தட்டிப் பேசாமல் இருக்கச் சொன்னேன். ஒவ்வொருவராக சொல்லத் தொடங்கினார்கள். அவள் முறையும் வந்தது.

“பெயர் கௌசல்யா, தமிழ் மீடியம், ஊர் திருவானைக்கோவில், படித்தது அறிவியல் பிரிவு, மதிப்பெண் 1030, அப்பாக்கு ஃபாக்டரியில் வேலை.”

சொல்லி முடித்ததில் இருந்து அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். யாரோ உலுக்குவது போலிருந்ததால் உலகத்திற்கு வந்த நான், என் முறை வந்தவுடன், பெயர் தாஸ், ஆங்கில மீடியம், படித்தது கம்ப்யூட்டர் சைன்ஸ், மதிப்பெண் 526, அப்பா டீச்சர்னு சொன்னவுடன் வகுப்பில் ஒரு சிரிப்பு எழுந்தது.

ஆசிரியர் அதை அடக்கியதும், பிரபு எழுந்தான்; அவன் சொல்லத்தொடங்கினான், நான் அவன் சொல்லப்போகும் மதிப்பெண்ணுக்காக காத்திருந்தேன், நினைத்தது போலவே, 560 என்று சொன்னான். பிறகு எழுந்த ராஜேஷ் 520 என்று சொன்னான்.

உடனே அந்த லெக்சரர், “ம்ம்ம், ஒன்னாத்தேன் சேர்ந்திருக்கிறீங்க போலிருக்கு? மாப்பிள பெஞ்சா, சரிதான் உங்களுக்கு ஏத்த இடம்தான். ம்ம்ம் கல்லூரி பேரைக் கெடுக்காம இருந்தாப்போதும்.” சொல்லிவிட்டுச் சிரித்தார். நாங்களும் எங்களுக்குள் சிரித்துக்கொண்டோம்.

இப்படியே அந்த நாள் முழுவதும் தொடர்ந்தது, ஒவ்வொருமுறையும் நாங்கள் முடிக்கும்பொழுது சிரிப்பொலி எழுந்து அடங்கியது, பெரும்பாலும் பெண்கள் பகுதியில் இருந்துதான் அது தொடங்கியது.

லஞ்ச் பிரேக்; நான் நேராக அவளிடம் சென்று, “என்னங்க, ரொம்ப பசிக்குது, டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வரலை. காசும் கொஞ்சம் கம்மியா இருக்கு. உங்க சாப்பாடு கொடுக்க முடியுமா நாங்க மூணுபேரும் ஷேர் பண்ணிப்போம்.”

இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத அவள் யோசிக்க முடியாமல் கையில் இருந்த டிபன்பாக்சை என்கையில் கொடுத்தாள். நாங்கள் எதிர்பார்த்தது தான் அது; ஆனால் டிபன்பாக்சை திரும்பக் கொடுக்கும் பொழுது நாங்கள் நினைக்காதது நடந்தது.

தொடரும்…

One thought on “தொடர்கதை – தேவதையின் காதலன் (1)(Story)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s