Y tu mamá también

இந்தப் படத்தைப் பார்த்ததில் இருந்தே இரண்டு வரி இந்தப் படத்தைப் பற்றி எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கிய படம். ரொம்ப காலமாக எழுதப்போகும் திரைவிமர்சனங்கள் வரிசையில் உட்கார்ந்திருந்தது; ஆனால் என்னமோ ஒவ்வொரு முறை எழுத உட்காரும் பொழுதும் ஏதோ ஒரு விஷயம் தடுத்து மீண்டும் மீண்டும் ட்ராஃப்ட் ஆகவே இருந்ததை கொஞ்சம் ஒப்பேற்றி வெளியிடுகிறேன். இன்னொரு விஷயம் படமே அடல்ஸ் ஒன்லி தான் எனும் பொழுது அதைப் பற்றிய விமர்சனமும் அப்படித்தான் இருக்குமென்பதால் வயதுக்கு வந்தவர்களுக்கான பதிவு இது. இதை தலைப்பிலேயே போட்டிருக்கலாம் தான் என்றாலும் அது வாசகர்களை குழப்பிவிடும் வாய்ப்பிருப்பதால் இங்கே அறிவிக்கிறேன். வயசுக்கு வராதவர்கள் அப்படியே எஸ்கேப் ஆகிவிடவும்.

நான் பாபெல்(Babel) பார்த்துவிட்டு, அலெஜாண்ட்ரோ கன்ஸாலஸ் இன்னாரிட்டுவையும்(Alejandro González Iñárritu), கெய்ல் கார்சியோ பெர்னாலையும்(Gael García Bernal) தேடிக்கொண்டு அலைந்த பொழுது கண்ணில் பட்ட படம் இது. Alfonso Cuarón பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் ஹாரி பாட்டர் வகையறாவின் ஒரு பகுதியைக் கூட இவர்தான் இயக்கியிருந்தார்(Harry Potter and the Prisoner of Azkaban -2004). அவருடைய படம் தான் இந்த Y tu mamá también ஆங்கிலத்தில் “And your mother, too” என்று மொழிபெயர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

படம் இரண்டு இளைஞர்களையும் ஒரு இளம் பெண்ணையும்(In her late 20’s ஆமா) சுற்றி சுழல்கிறது. ஜூலியோ(Julio), மற்றும் தெனொச்(Tenoch) இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் இதில் ஜூலியோ நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன், தெனோச் மெக்ஸிகோ அரசியிலில் இருக்கும் பெரும் புள்ளி ஒருவரின் மகன். இருவரும் அவரவர்களின் பெண் தோழிகளை உறவு கொள்வதில் இருந்து தொடங்குகிறது படம்; எதனால் இந்தக் காட்சி முக்கியத்துவம் பெருகிறதென்றால் இவர்கள் இருவரின் மனநிலையையும் பிரதிபலிக்கிறது அந்தக் காட்சிகள். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தின் மையமே ஒரு மாதிரி “உடலுறவு” கொள்வது என்பதைப் பற்றி பேசுவதால் அப்படிப்பட்ட ஒரு தொடக்கம் படத்திற்கு தேவைபடுகிறது.

கதைசொல்லி ஒருவர் கதை சொல்வதாக நகரும் கதையில் ஆரம்பத்திலேயே இருவரின் சமூகநிலை எப்படி அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்று இயக்குநர் சொல்லிவிடுகிறார். தெனொச்’சின் காதலியின் வீட்டாருக்கு இவர்கள் இருவதும் காதலிப்பதும் உறவு வைத்திருப்பதும் தெரியும் என்றும் ஆனால் கண்டுகொள்ளாமல் விடுவதாகச் சொல்லப்படுகிறது அதே சமயத்தில் ஜூலியோவின் காதலியின் வீட்டாருக்கு முழுவதுமாகத் தெரியாவிட்டாலும் ஒரு மாதிரி காதலியின் அப்பா சந்தேகப்படுவதாகக் காட்டபடுகிறது.

இப்படி தானுண்டு தன் பிகருண்டு என்று அலைந்து கொண்டிருக்கும் நண்பர்கள் இருவரும் மேற்ச்சொன்ன அந்த இளம் பெண்ணை சந்திக்கிறார்கள் ஒரு திருமணத்தில். அவர்களை அந்தப் பெண் கவர்ந்துவிட “சொர்க்கத்தின் வாய்” என்று அழைக்கப்படும் கற்பனையில் மட்டுமே இருக்கும் ஒரு கடற்கரைக்கு தாங்கள் இருவரும் செல்லவிருப்பட்தாகவும் சேர்ந்து கொள்ள விருப்பமா என்று சைக்கிள் கேப்பில் கேட்கிறார்கள். ஆனால் அந்த இளம் பெண் லூயிஸா(Luisa)தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிடுகிறார்.(லூயிஸா ஏற்கனவே திருமணம் ஆனவர் – ஒருவகையில் தெனொச்’சின் உறவுக்காரரையே மணந்தவர்).

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேறுவிதமாக அமைந்துவிட லூயிஸா, ஜூலியோ மற்றும் தொனோச்’சுடன் சொர்க்கத்தின் வாசலுக்கு வருவதாய்ச் சொல்ல வேண்டிய கட்டாயம்(இங்க ஒரு ட்விஸ்ட் இருக்கு – படத்தின் அந்தக் காட்சியில் சொல்லப்படும் பொழுது, லூயிஸாவின் கணவன் ஒரு நாள் தொலைபேசி தான் வெளியூர் சென்ற இடத்தில் இன்னொரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள நேரிட்டதை குடிபோதையில் இவளிடம் புலம்புவதால் லூயிஸா இளைஞர்களுடன் பயணம் செல்ல ஒத்துழைப்பதாக வரும் – இதில் இன்னொரு ட்விஸ்ட் இருக்கு) இவர்கள் மூவரும் அந்தக் கடற்கரைக்குப் போவதாய் முடிவெடுத்ததும் படம் சூடுபிடிக்கத் தொடங்கும்; அதற்காக முன்னால் மெதுவாகச் சென்றதாய்ப் பொருள் இல்லை. இன்னும் வேகமெடுக்கும்.

மூன்று பேரும் காரில் சொர்க்கத்தின் வாசலுக்குப் பயணிக்கும் பொழுது தங்களுடைய முன் அனுபவங்களைப் பற்றிச் சொல்கிறார்கள் தங்கள் காதலன் காதலிகளைப் பற்றி, அவர்களுடனான உறவு பற்றி. இந்த இடத்தில் ஒரு விஷயம் மூவருமே உண்மைகளைச் சொல்வதாய் இயக்குநர் சொல்லியிருப்பார். இந்த நேரத்தில் ரொம்ப சீரியஸான விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசுவார்கள் அதையெல்லாம் நான் எழுதினேன் என்றால் உதைவிழும். சரி மீண்டும் கதைக்கு போகும் வழியில் ஒரு இடத்தில் தங்கியிருக்கும் பொழுது லூயிஸா அவளுடைய கணவனுக்கு தொலைபேசி தான் அவனை விட்டுக் கிளம்புவதாகச் சொல்லி மெஸேஜ் சொல்லுவாள்.

இப்படியாக போய்க்கொண்டிருக்கும் பயணத்தில் இன்னொரு ட்விஸ்ட் வரும் எப்படியென்றால் முதலில் தெனோச்’சுடன் லூயிஸா உறவு கொள்வாள்; இதை மறைந்திருந்து ஜூலியோ பார்த்துவிட இதனால் கோபமடையும் ஜூலியோ தானும் தெனோச்’சுடைய காதலியும் உறவு கொண்டதாகச் சொல்லுவான். இதைத் தொடரும் அடுத்த நாளில் லூயிஸா ஜூலியோவுடன் உறவுகொள்ள தெனோச் தான் ஜூலியோவின் காதலியுடன் உறவு கொண்டதைச் சொல்வான். இதைவிடவும் முக்கியமான ஒரு விஷயத்தை இயக்குநர் சொல்லாமல் சொல்வார் அது இவர்கள் இருவருமே ஒரு விதத்தில் அந்தப் பெண்ணுடன் உறவு கொள்ளத்தான் அத்தனையும் செய்வார்கள். ஆனாலும் அவர்கள் இருவரிடையேயும் பகை வரக்கூடிய அளவிற்கு இந்த விஷயம் கொண்டு சென்றுவிடும்.

ஒரு விதத்தில் நாம் படம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் லூயிஸா அவளுடைய கணவனை பழிதீர்க்கத்தான் இவர்களுடன் பயணம் செய்வதாய் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கும் அப்படிப்பட்ட பிம்பத்துடன் நீங்கள் இருக்கும் பொழுது; இவர்கள் இருவராலுமே லூயிஸாவிற்கு பயனொன்றும் இல்லை என்று இயக்குநரால் சொல்லாமல் சொல்லப்படும்; இரண்டு இளைஞர்களும் இந்த விஷயத்தில் பேசத்தான் லாயக்கு என்பது போல் புனையப்படும். இந்தக் காட்சிகள் இயக்குநரால் மிகவும் திறமையாக கையாளப்பட்டிருக்கும்.

இவர்கள் இருவரும் கற்பனையில் இருப்பதாய் நம்பப்படும் கடற்கரையை கண்டுபிடிக்கிறார்கள். மூவரும் கடற்கரையின் அழகை ரசிக்கிறார்கள் விளையாடுகிறார்கள் ஒட்டுமொத்தமாக என்ஜாய் செய்கிறார்கள். ஆனால் நண்பர்கள் இருவருக்கும் மனத்தாங்கள் ஏற்பட்டு விடுகிறது; பயணத்தையே இவர்கள் பாழ் செய்து விடுவார்கள் என்று லூயிஸா ஏகப்பட்ட கன்டிஷன் போட்டு அவர்களுடன் வரப்போக மனஸ்தாபங்களை மறந்து இருவரும் ஒன்றாக இருப்பார்கள். பின்னர் லூயிஸா கடற்கரையிலேயே தங்கி அங்கிருக்கும் குகைகளுக்குச் செல்லப்போவதாகச் சொல்ல. இவர்களின் வீட்டில் தேடுவார்கள் என்பதால் இவர்கள் திரும்பவும் சொந்த ஊருக்கே வர கதை முடிவை நோக்கி பயணிக்கும்.

இவர்கள் சொந்த ஊருக்கு வந்ததும் தத்தமது காதலிகளை கழட்டிவிடுவார்கள் பின்னர் இருவரும் சந்தித்துக் கொள்ளவே மாட்டார்கள். ஒரு வருட இடைவெளிக்குப் பின் சந்தித்துக் கொள்ளும் பொழுது பரஸ்பரம் விஷயங்களை பரிமாறும் சமயத்தில் தான் தெனோச் சொல்லப்போய் ஜூலியோவிற்குத் தெரியவரும் லூயிஸா கேன்ஸரால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவளுடைய வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருந்ததாகவும். அப்பொழுது தான் படம் பார்ப்பவர்களுமே இந்த விஷயம் சொல்லப்படும். இது தெரிந்தபின் படத்தை இன்னொரு முறை பார்த்தால் வித்தியாசமாகயிருக்கும் லூயிஸாவின் நடவடிக்கைகள்.

மிகவும் நெருக்கமானதாய் இருக்கும் இருவரின் நட்பென்பது எத்தனை பாசாங்குகளை உள்ளடக்கியதாகயிருக்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம். அல்பான்ஸோ கியூரன் இந்த பாசாங்குகளை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார் இந்தப் படத்தில்; டிவிடிக்கள் கிடைக்கும் இந்தியாவில் என்று நினைக்கிறேன். பதின்ம வயது இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம் ;-).

படத்தில் அங்கங்கே மெக்ஸிகோவின் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கை இடித்துக் காட்டப்படும். கதை சொன்ன விதமும் படமெடுக்கப்பட்டிருக்கும் விதமும் மிக அருமையாக இருக்கும். அதைப் போலவே நடிகர்களும் கெய்ல் கார்சியோ பெர்னாலைப் பற்றி கேட்கவே வேண்டாம் அருமையாக நடித்திருப்பார் படத்தில். மொத்தமாக மூன்று கதாப்பாத்திரங்களை மட்டுமே வைத்து வேண்டுமானால் ஒரு கார் கூட சேர்த்துக் கொள்ளலாம் படத்தை அற்புதமாக எடுத்திருப்பார் இயக்குநர். இன்றைய நிலையில் மேற்கத்திய நாடுகளில் நிலவும் இளைஞர்களின் வாழ்க்கையை படம் பிடிப்பாதாகயிருக்கும் இந்த Y tu mamá también.

One thought on “Y tu mamá también

  1. //தெரிந்தபின் படத்தை இன்னொரு முறை பார்த்தால் வித்தியாசமாகயிருக்கும் லூயிஸாவின் நடவடிக்கைகள்.//

    என்னை பொறுத்தவரையில் எந்தொரு படத்தையும் மறுமுறை பார்த்தால்.நாம் ரசிக்கும் கதாபாத்திரமும் அதன் நடவடிக்கைகளும் வித்தியாசமாகவே தெரியும்.

    இம் மாதிரியான படம் பற்றிய பதிவுகள் அய்யனார் அவர்களின் பதிவிற்கு பிறகு தங்களின் பதிவுகளில் தான் நான் படிக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s