American Gangster

ஒரு திரைப்படத்தில் ரிட்லி ஸ்காட், ரஸல் க்ரோ, டென்ஸல் வாஷிங்க்டன் இவர்களில் ஒருவர் இருப்பதே என்னைப் பொறுத்தவரை போதுமானது அந்தத் திரைப்படத்தை திரையில் சென்று பார்ப்பதற்கு; இவர்கள் மூவரும் இருக்கும் படத்திற்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய பொழுதே டிக்கெட் புக் செய்திருந்தேன். டிவிடி ரிலீஸும் பிப்பிரவரி 19 தான் என்பதால் வேறு வாய்ப்பு இல்லை.

ப்ராங்க் லூகாஸ் என்ற அமேரிக்க போதைமருந்து தாதா(ஹெஹெ) பற்றிய படம். உண்மையான கதை என்று படம் சொன்னாலும் படத்தின் 20% தான் உண்மை என்று ப்ராங்க் லூகாஸ்(ஒரிஜினல்) சொல்லியிருப்பதால் படத்தின் ஒரிஜினாலிட்டி பற்றிய கேள்விகள் உண்டு. அதன் காரணமாகவே அகாதமி அவார்ட் நாமினேஷன்களில் பெஸ்ட் ஆக்டர் மற்றும் பெஸ்ட் டைரக்ஷன் கிடைக்கலை என்று சொல்கிறார்கள் – யாமிறியேன் பராபரமே.

எனக்கு ஸ்கிரீன் ப்ரஸன்ஸ்(திரை ஆளுமை :)) பற்றிய பிரஞ்ஞை வந்ததும் டென்ஸல் வாஷிங்டன் படங்கள் எப்பொழுது பார்த்தாலும் அவருடைய ஸ்கிரீன் ப்ரஸன்ஸ் அருமையாக விளங்கும். அப்படி உணரும் இன்னொரு நபர் ஜாக் நிக்கல்ஸன் அப்படி தமிழில் ஒரு கதாப்பாத்திரம் சொல்லணும் என்றால் ‘நந்தா’வில் வரும் ராஜ்கிரண் கதாப்பாத்திரத்தைச் சொல்லலாம். ஆனால் அந்த கேரக்டர் அத்தனை விரிவாக இருக்காது. படம் முழுக்க பிரமாண்டமாக நிற்கிறார் டென்ஸல் வாஷிங்டன், ஆனால் இதை விரித்து எழுதும் வார்த்தைகள் வெறும் கிளிஷேவாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். இரக்கமேயில்லாத போதை பொருள் கடத்துபவராக, தவறு செய்யும் தன்னுடைய தம்பி ஆகட்டும் உறவினர் ஆகட்டும் சகட்டுமேனிக்கு அடித்து நொறுக்குவதுமாய் நமக்கு கொஞ்சம் கொஞ்சமாய் வாஷிங்கடன் மறைந்து ப்ராங்காக மாறுகிறார்.

ரஸல் க்ரோ, ப்ராங்க் லூகஸை பிடிக்கும் காவல் அதிகாரி ரிச்சி ராபர்ட்ஸாக வருகிறார், லஞ்சம் வாங்காத ஆனால் ஒரு உமனைஸர் ரோல், வெளுத்து வாங்குகிறார். மில்லியன் டாலர் பணம் கிடைத்ததும் அதை திரும்பவும் ஒப்படைக்கும் ஒரு கேரக்டர், அதை படத்தில் நகைச்சுவைக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். கடைசியில் டென்ஸல் வாஷிங்க்டன் ‘மில்லியன் டாலரை நீங்க திரும்ப கொடுத்துட்டீங்கன்னு கேள்விப்பட்டேன் உண்மையா?’ என்றும் அன்றைக்கு அப்படி செய்துட்டீங்க இன்னிக்கு அப்படி செய்வீங்களா? என்று கேட்பது போல் இருக்கும் காட்சி படம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ‘நச்’ என்று வரும்.

இவர்கள் இருவர் தவிர்த்து கொஞ்சம் நல்ல ரோல் என்றால் ப்ராங்கின் அம்மாவிற்குத் தான், இந்தப் படத்தில் நடித்ததற்காக Best supporting actress அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். டென்ஸல் வாஷிங்க்டன் வீட்டில் சோதனை நடந்து முடிந்ததும் அவருக்கும் அவருடைய தாயாருக்கும் நடக்கும் உரையாடல் பல தமிழ் சினிமாக்களில் நாம் பார்த்திருக்கக்கூடியது என்றாலும், அதில் அவர் அம்மா டென்ஸல் வாஷிங்க்டனை அறையும் ஒரு நிகழ்வு இல்லாமல் தமிழ்ப்படம் முடிந்திருக்காது தான் என்றாலும் அந்தக் காட்சி நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் அதைத் தவிர வாழ்க்கையில் நேர்மை என்பதை எதற்கும் உபயோகிக்காத ஒரு பாத்திரமாக ரஸல் க்ரோ நடித்திருக்கிறார். இதைப்பற்றி கோர்ட்டில் அவரது மனைவி சொல்லும் வார்த்தை அருமையாக இருக்கும் ‘குற்றவாளிகளைப் போலவும், லஞ்சம் வாங்கும் போலீஸ் காரர்களைப் போலவும் நீங்களும் நரகத்திற்குத்தான் போவீர்கள்’ என்று அவரது மனைவி சொல்வார்.

படத்தில் இடம் பெறும் வசனங்கள் சில அருமையாக இருந்தன குறிப்பாக, ப்ராங்க் தன் தம்பியிடம் க்ளப்பில் சொல்லும் வசனம், யார் ரொம்பவும் ஆடம்பரமாக பயமில்லாததைப் போல் இருக்கிறார்களோ அவர் தான் மிகவும் பயமுள்ளவராக்க இருப்பார் என்று. படத்தில் இந்தக் காட்சியை மையப்படுத்தி இன்னும் சில காட்சிகள் வரும், எப்பொழுதும் பெரிய பணக்காரரைப் போல் ஆடையணியாமல் மிகவும் சாதாரணமான ஆடை அணிந்து எல்லாரையும் மிரட்டிக் கொண்டு ரௌடி போல் வாழாமல் சாதாராணனாக இருக்கும் ப்ராங்க் தன் காதலி/மனைவி சொன்னாள் என்று கொஞ்சம் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து செல்லும் பொழுதுதான் போலீஸின் சந்தேகக் கண்றிற்கு தென்படுவார்.(பொண்டாட்டி சொல்றதையெல்லாம் கேக்கக்கூடாதுங்குறது உள்ளூறை உவமை). அது தெரிந்ததும் மனைவி வாங்கித் தந்த உடையை முதலில் எரிப்பது கவிதை.(ஹிஹி)

காட்சிகள் அருமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன, 1970 காலக்கட்டத்தை படம் பார்க்கும் நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும். வியட்நாமையும் தாய்லாந்தையும் காண்பிக்கும் காட்சிகளில் Landscape காண்பிக்க கிடைத்த குறைந்தபட்ச வாய்ப்பையும் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். படத்தில் குறிப்பிடத்தக்க அளவு நகைச்சுவை உணர்வு கலக்கப்பட்டிருக்கிறது, மிகவும் அருமையாக. தன்னிடம் இருந்து 98% pure heroin வாங்கி இடைத் தரகர்கள் மூலம் இன்னும் பௌடர் கலக்கி விற்பதை அறிந்த ப்ராங்க் லூகாஸ், அப்படிப்பட்ட ஒருவரிடம் பேசும் காட்சி இதற்கு உதாரணம்.

ரஸல் க்ரோ, டென்ஸல் வாஷிங்க்டனை யாருக்கும் கீழ் வேலை செய்யவில்லை என்றும் தனியாக ‘middle man’களை கழட்டி விட்டு சொந்தமாக pure heroin வியட்நாமில் இருந்து கடத்தி வருவதாகச் சொல்ல, இத்தாலிய கனெக்ஷன் இல்லாத ஒரு போதை மருந்து கடத்துபவரை பற்றி கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத பெரிய லெவல் போலீஸ் ‘உன் வேலையில் கடைசி இன்சில் நின்று கொண்டு காமெடி செய்யாதே!’ என்று சொல்வது நமக்கு காமெடியாக இருந்தாலும் எதார்த்தம். அமேரிக்காவில் இத்தாலிய போதைப் பொருள் ஃபேமிலிக்களின் ஆதிக்கத்தில் இருந்ததை மாற்றி கருப்பின நபரான ப்ராங்க் லூகாஸ் தனி மனிதனாக போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தது பெரிய அளவில் நம்ப முடியாதது.

Gangster படங்களில் The God Father ஐ நெருங்கும் அளவிற்கு இருக்கிறது என்று சில விமர்சனங்கள் சொல்கின்றன. ம்ஹூம் எனக்குப் படலை. ஒருவேளை மர்லன் ப்ராண்டோவை என்னால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லையோ தெரியாது. ஆனால் நிச்சயம் அருமையாக எடுக்கப்பட்ட படம்.

உண்மையான ப்ராங்க் லூகாஸ் கடைசியில் தான் மாட்டிய பிறகு, இந்த போதைப் பொருள் கும்பலின் 100 க்கும் மேற்பட்ட ஆட்களைக் காட்டிக் கொடுத்ததால் 70 வருட சிறை தண்டனை 15 ஆண்டுகளாக ஆக்கப்பட்டு வெளிவந்து இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வியட்நாமில் அமேரிக்க போர் செய்து வந்த பொழுது, அங்கே இருந்து இறந்த அமேரிக்க போர்வீரர்களைக் கொண்டுவரும் cabin களில் வைத்து போதைப் பொருள் கடத்திக் கொண்டு வந்துள்ளனர்.

ரிச்சி ராபர்ட்ஸ்(ரஸல் க்ரோ கதாப்பாத்திரம்) கடைசியில் ப்ராங்க் லூகாஸின் அடர்னியாக வேலை பார்த்ததாகவும். இன்றுவரை இருவரும் நண்பர்களாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்முறைக் காட்சிகள் என்று பெரிய அளவில் கிடையாது ராம்போ 4 ஐ எல்லாம் இதனுடன் கம்பேர் செய்யவே முடியாது, ஆனால் சில உடலுறவுக் காட்சிகள் உண்டு. படம் இந்தியாவில் அடல்ஸ் ஒன்லி. ஆனால் ஒருமுறை பார்க்கவேண்டிய படம் தான் American Gangster.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s