மரணம் பற்றிய சில உதவாத குறிப்புகள்

என் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் பெரிய இழப்பை மரணம் அளித்ததில்லை, ஆனால் மரணத்தைப் பற்றிய பயம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. ஏகப்பட்ட கேள்விகள் விடையில்லாமல் தொக்கி நின்றிருக்கின்றன, முதல் முறையாக ஒரு மரணம் உன்னை எப்படி பாதிக்கும் தெரியுமா என்ற கேள்வி அளித்த கொடூரம் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது. என் அப்பா "நாளைக்கு நான் இறந்து போனால் என்ன செய்வீர்கள்" என்ற கேள்வியை என்னிடம் கேட்ட பொழுது எனக்கு என்ன வயது என்று தெரியாது, ஆனால் தொடர்ச்சியாக இந்தக் கேள்வி என் மீது வீசப்பட்டிருக்கிறது. மரணம் கொடுக்கும் இல்லாமையைப் பற்றி சிந்திக்கக் கூடத் தெரியாத நாட்களிலேயே இந்தக் கேள்விக்கான விடையை யோசித்திருக்கிறேன்.
 
நெருக்கமான சொந்தங்களில் நண்பர்களில் மரணம் இதுவரை சம்பவித்ததேயில்லை, எனக்குத் தெரிந்து இறந்து போனது என் அப்பாவின் அம்மாவும் அப்பாவும் தான். சாமியாராய்த் திரிந்த என் தாத்தாவின் மரணம் பற்றிய செய்தி தான் கிடைத்தது, நீண்ட நெடிய உருவம் இடுப்பு வரை நீளும் தாடியுடனும் பிருஷ்டத்தைத் தொடும் தலைமுடியுடன் இருந்தவரை அவ்வளவு பழக்கம் கிடையாது. இந்திய-இங்கிலாந்து விமானப்படையில் இருந்ததாகவும் பிறகு காது கேட்காததால் விமானப்படையின் கனரக ஓட்டுனராக சில காலம் இருந்ததாகவும் பின்னர் வீட்டிற்கு வந்ததாகவும் அங்கங்கே சில விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன், அவருடைய பெயர் தான் எனக்கு வைத்திருந்தார்கள் "பவானிதாஸ்" இன்னும் தாஸ் என்ற அளவிலும் என் மாமா சித்தியின் மூலமாகவும் அவருடைய பெயரின் இருப்பு இருக்கிறது. அதுதான் முதன்முதலில் சந்தித்த மரணமாயிருக்கும். சின்னவயது ஒன்றும் தெரியாத காலத்தில் நடந்தது.
 
அப்பாவின் அம்மாவிற்கு என் மீது கொள்ளைப் பிரியம், குழந்தையாக என்னை அவர்களிடம் கொடுத்துவிட்டு அம்மா டீச்சர்ஸ் டிரெயிங் சென்றுவிட்டார் என்று தெரியும். என்னை சிறிது காலம் வளர்த்தது அவர்தான். கொஞ்சம் மனநலம் பிறழ்ந்து அவர் என் வீட்டின் ஒரு அறையில் இருந்தது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது, அவர் இறந்த பிறகு கூட அம்மா அந்த அறையை உபயோகப்படுத்த மாட்டார். என்னமோ இன்னமுமே கூட அந்த அறையைப் பற்றிய நினைப்பு சட்டென்று 'பாச்சம்மா' பற்றிய நினைவுகளைக் கிளறிக்கொண்டு வருகிறது. அவருக்கு வெத்தலைப் பாக்கு சீவல் புகையிலை வாங்க அப்பா கொடுக்கும் இரண்டு ரூபாயில் கமிஷன் அடித்து ஐம்பது காசுக்கு வாங்கிக் தின்று விட்டு 1.30 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அப்பாவிற்கும் தெரியுமாயிருக்கும் ஆனால் பாச்சம்மா அப்பாவிடம் போட்டுக்கொடுத்து எனக்குத் தெரியாது. அக்காவுடனான என் சண்டைகளில் அப்பாவும் அம்மாவுமே கூட அக்கா பக்கம் பேச அவர் மட்டும் என் பக்கம் பேசியது நினைவில் இருக்கிறது. அப்பா தன் தம்பியிடம் அவரை அனுப்பிய சிறிது காலத்தில் எல்லாம் அவர் இறந்துவிட்டார், என் வீட்டில் அந்த மரணம் நிகழ்ந்திருந்தால் நான் பட்டிருக்கக்கூடிய வேதனை அப்பொழுது அனுபவிக்கவில்லை.
 
அவ்வளவுதான் மரணம். ஆனால் மரணம் பற்றிய தொடர்ச்சியான கேள்விகள் இருந்ததுண்டு, பொன்னியின் செல்வன் போல், வந்தியத்தேவன் போல், சுஜாதா போல் சாதிக்காமலேயே இறந்துவிடுவேனோ என்ற பயம் எப்பொழுதுமே இருந்திருக்கிறது. மரணம் பற்றிய கேள்விகள் இயல்பாய் எழுப்பும், மரணத்திற்குப் பின் யாருக்கு என்னைத் தெரியும் உலகத்திற்கு என் நினைவு எப்படி வரும் உலகில் எத்தனை பேருக்கு என்னைத் தெரியும் போன்ற கேள்விகள். அந்தச் சமயம் பார்த்த கடவுள் படங்கள் நினைவில், அசுரனாக என்னையே நினைத்துக் கொண்டு எப்படி சிக்கலான கேள்வி கேட்டு இறப்பற்ற வாழ்க்கையை கடவுளிடம் யாசிக்கலாம் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. எத்தனை இரவுகள் எத்தனை இரவுகள் கடவுள் வந்து என்னிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, மரணமற்ற பெருவாழ்வைப் பற்றிய வரத்துடன் நான் இருப்பதைப் போன்ற நினைப்புகள்.
 
பொன்னியின் செல்வன் படித்து, ஆதித்த கரிகாலனின் வாசகமான, இளம் வயதில் சாதித்து இறந்துவிட்டால்  வயதான தோற்றம் மறைக்கப்பட்டு சிறுவயது நபராகவே உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படுவேன் என்று நினைத்திருக்கிறேன். என் பாட்டியின் நிலையைப் பார்த்து சிறு வயதிலேயே இறந்துவிடும் ஆவல் அதிகமாயிருக்கிறது. இந்தியாவிற்காக உடலெல்லாம் வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு பாகிஸ்தானில் குதிப்பது கொஞ்ச காலக் கனவு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் சிறு வயது மரணம் தேவைப்படும் புகழ். இந்தியாவிற்கு வேறொரு நாட்டிற்கு வரும் சண்டையில் என்னை தற்கொலைப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று உணர்ச்சிவசப்பட்டு நான் நிற்கும் காட்சிகள் மனக்கண்ணில் இன்றும் ஓடுகிறது. எல்லாம் கடந்து போய் மரணத்தை பற்றிய பயம் தோன்றிய காலமும் உண்டு, அப்பா இறந்திவிட்டால் என்ன செய்வது அடுத்த நாள் வாழ்க்கை எப்படி போகும். அம்மாவின் 1500 ரூபாய் சம்பளத்தில் என்னையும் அக்காவையும் வளர்க்கமுடியுமா? அம்மா அடிக்கடி சொல்லும் உங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு இன்னொரு வீட்டில் கூட போய் நிற்கமுடியாது என்ற வார்த்தைகளைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். பாரதியின் "பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை" என்னை அப்படியே நெருப்பின் அருகில் நிறுத்துவதைப் போல் உணர்ந்திருக்கிறேன்.
 
பாரதியைப் பற்றிய எத்தனையோ வேறுவிதமானக் கட்டுரையைப் படித்திருந்தாலும் என் வாழ்க்கையுடன் ஒத்துப்போனதோ அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டதோ ஆன சிலவரிகள், என் மனதில் கற்பனைகளுக்கெட்டாத உயரத்தில் கோட்டை கட்டி அவரை உட்கார வைத்துவிட்டது. இந்த வரிகளை உங்களால் படித்து உணர்ந்து கொள்ளவேமுடியாது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் அப்படி ஒரு சூழ்நிலையை நீங்கள் அனுபவித்துவிட்டு பாரதியின் இந்த வரிகளை படிக்கும் பொழுது உங்களுக்குள்ளும் பாரதிக்கான கோட்டை சிம்மாசனம் எல்லாம் தானாய்த் தோன்றும். டெல்லியில் பெங்களூரில் என இந்த வரிகளை பாரதி எழுதியிருக்கக்கூடிய சந்தர்ப்பத்தை எத்தனையோ தடவை உருவாக்கிப் பார்த்திருக்கிறேன். என்னைப் போல் ஒருவனைப் பார்த்த உணர்வில் மனம் நெகிழ்ந்து போய் பேசமுடியாமல் உட்கார்ந்திருக்கிறேன். அந்த வரிகள் மட்டுமல்ல அச்சமில்லை கவிதையின் அத்தனை வரிகளும் எனக்கு உத்வேகத்தை என் வழியில் தொடரும் இடற்பாடுகளைத் தூக்கியெறிந்து என் பயணத்தை தொடர உதவியிருக்கின்றன.
 
அப்பா தன்னுடைய இம்பார்ட்டன்ஸைக் காட்டுவதற்காகக் கேட்ட அன்றைய கேள்வி இன்றுவரை தொடர்கிறது ஆனால் அந்தக் கேள்வி என்னை அணுகும் முறை வித்தியாசமாய் இருக்கிறது. பல சமயம் நினைத்துக் கொள்வே என் அப்பாவின் மரணம் என்னிடத்தில் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று. அந்த பதிலுமே கூட காலத்தின் ஓட்டத்தில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் இது மாதிரியான எந்தக் கேள்வியும் என் அம்மாவைப் பற்றி வந்ததில்லை, நெருப்பென்று சொன்னால் சுட்டுடுமா என்றால் என் அம்மா விஷயத்தில் சுடும் என்று சொல்வேன். அம்மாவிற்கும் அப்பாவிற்குமான கண்ணோட்டத்தில் கூட என்னால் ஒற்றுமையைப் பார்க்க முடியவில்லை. நரை விழுப்போகும் அம்மாவைக் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத காலங்கள் எல்லாம் என் வாழ்வில் உண்டு.
 
எத்தனையோ திடமானவன் என்று என்னை நானே நினைத்துக் கொண்டாலும் விபத்தை அருகில் சென்று அணுகும் தைரியம் வந்ததில்லை. சில சமயங்களில் நமது தைரியங்களுக்குப் பின்னால் தான் பயம் மறைந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு என் மரணம் நிகழ்ந்தால் என் வீட்டில் நடைபெறப்போகிற மாற்றங்களைப் பற்றி அலுவலகத்தின் நான் மட்டும் வேலை பார்க்கும் சில இரவுப் பொழுதுகளில் யோசித்துக் கொண்டிருப்பேன். கற்பனைகள் எல்லைகளில்லாதவை உங்களுக்கு ஏற்றது போல் கற்பனை மாறும் நீங்கள் நினைக்கும் விதமாய் கற்பனை தோன்றும் கற்பனை பொய்.
 
அப்பாவிடம் நேற்று எப்ப பெங்களூர் வரீங்க நான் காஷ்மீர் போறேனே என்று கேட்டதற்கு "தம்பி பயமாயிருக்கு போய்த்தான் ஆகணுமா?" என்ற கேள்வி எனக்குள் ஏற்படுத்திய சந்தோஷம் எழுதுவதற்கு அப்பாற்பட்டது. "நைனா நான் காஷ்மீர் போகலை ஜம்முதான் போறேன் அங்க பிரச்சனையே கிடையாது" என் அப்பாவிடம் நாங்கள் யாரும் உண்மை பேசமாட்டோம் ஆனால் அவருக்கு உண்மை தெரியும் எங்கள் வாய்களின் மூலமாய் அவருடைய காதுக்கு உண்மை போகாது. அக்காவிடம் விளையாட்டிற்குச் சொன்ன இந்தியாவில் அடுத்த குண்டு வெடிச்சா அது பெங்களூரில் தான் வெடிக்குமாயிருக்கும் அது நான் வேலை செய்ற ஆபிஸில் வெடிச்சா என்ன ஆகுமோ அதுதான் நான் ஜம்மு-காஷ்மீர் போறப்ப எதிர்பாராத விதமா எதுவும் நடந்தா ஆகும் என்றேன். அக்காவிற்கு கோபம் வந்திருக்க வேண்டும் மரணம் என்பது நெருப்பைப் போல பலருக்கு சொன்னாலே சுடும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s