பயணிகள் கவனிக்கவும் – பாலகுமாரன்

 

பொன்னியின் செல்வன் குந்தவை – வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா – சத்தியநாராயணாகத்தான் இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் பாலகுமாரன் மேல் அந்தச் சமயத்தில் நான் வைத்திருந்த அபிரிமிதமான பற்று, என் பதின்ம வயது, பாலகுமாரனின் எழுத்து இப்படி நிறைய சொல்லலாம். சொல்லப்போனால் இந்தக் கதை படித்துவிட்டு கல்யாணம் பண்ணினால் விதவைப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று உறுதிமொழி எடுத்ததெல்லாம் உண்டு. ஆனால் பாலகுமாரனின் வெற்றி என்று அதைத்தான் சொல்வேன் வாழைப்பழத்துக்குள் ஊசி ஏற்றுவதைப் போல் அதை அவர் செய்வார். சொல்லப்போனால் சின்ன வயதில் இருந்த பெண்கள் பற்றிய பொறாமை உணர்ச்சியைப் போட்டு பூட்டிவைத்தவர் பாலா. அவர் பெண்களைப் பற்றி எழுதுவது அவ்வளவு இயல்பாய் வருவதாய் எனக்குத் தோன்றியிருக்கிறது.

சொல்லப்போனால் நான் இன்று வரை சிகரெட், குடி பழக்கத்தை தொடாததற்கு நிச்சயம் பாலாவை ஒரு காரணமாகச் சொல்லலாம். அந்தக் காலத்தில் எல்லாம் அப்படி ஒரு பிரமை அவர் எழுத்தின் மேல்; அழுக்கான என்னை கால்களைச் சுத்தப்படுத்துவது என்று சொல்லி தொடங்கிவைத்தது கூட அவர்தான். எங்க சிவராமன் சார் சொல்வார் இங்கிலாந்தில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள் அவளுக்கு முன் ஆண்கள் உட்கார்ந்திருக்க மாட்டார்கள் என்று இதை மேனர்ஸாக அவர்கள் கருதுவார்கள் என்று. ஆனால் இதைப் போல் பெண்களைப் பற்றி புரியவைத்தது பாலாதான். மாற்றுக்கருத்து இல்லை.

எங்கள் வீடுகளில் பாலா பிராமணர்களை எதிர்த்து அவர்கள் செய்யும் கெட்டதையெல்லாம் எழுதுகிறார் என்பதில் தான் அவர்களுக்கு பிரியமே ஆரம்பித்தது என்று சொல்லலாம். இன்றும் உடையாரைப் பிடித்து தொங்கிக் கொண்டு அவர் அங்கேயும் பிராமணர்களின் தவறுகளை எழுதுறார் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னமோ அவர் ஆரம்பக்காலக்கட்டங்கள் ஏதோ தேவை காரணமாக தன்னை இகழந்துகொண்டதாகவும் ஆனால் பின்காலங்களின் தேவையால் தன் மீது அப்படிப்பட்ட பிம்பம் விழுவதை தடுக்கவே இப்படி பொய்யாய் சாமியார் வேஷம் கட்டுகிறாரோ என்ற சந்தேகம். அவர் ரொம்பவும் கீழ் வரைக்கும் போனதை எழுதியதால் மீண்டும் அதைச் சரிசெய்யும் சமயத்தில் சாதாரணமாக இருப்பதைக் காட்டமுடியாமல்; அதற்கும் மேல்நிலை என்ற ஒன்றை அவர் வலிந்து அவர் மேல் திணித்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.

பல சமயங்களில் அவருடைய கதைகளை மீளப்படிக்கும் பொழுது அவர் தான் மணந்த இருதாரத்தை Defend செய்வதற்காகத்தான் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுகிறாரோ என்று கூட படும் எனக்கு. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். எனக்குத் தெரிந்து நான் பாலகுமாரன் சிபாரிசு செய்து படித்த பல பெண்களுக்கு அவர் எழுத்துக்களின் மீது விருப்பம் வரவில்லை. எனக்கு காரணம் தெரியாது; ஒருவேளை ஆண்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் இருதார மணம் என்பது கொள்கை அளவில் கூட பெண்களுக்கு பிடித்தமானதாக இல்லாததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ பறந்துவிட்டது பதிவு. பயணிகள் கவனிக்கவும் அவருடைய இந்த எந்தவிதமான சமரசத்திற்கும் உள்ளாகாத எழுத்து என்று நினைக்கிறேன். ஆனாலும் அந்தக் காலத்தில் ஆண் ஒருவன் வாசக்டமி செய்துகொள்வதாகச் சொல்லி முடித்தது பெண்கள் மத்தியில் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்றோ இல்லை அதை ஒத்ததற்கான ஸ்டன்ட்டோ என்று படுகிறது எனக்கு.

நாவல்கள் எழுதுவதில் இருக்கும் டெம்ப்ளேட் முதலில் எனக்கு பிடிபடவில்லை; ஆனால் இப்பொழுது அவருடைய எந்த நாவலை எடுத்தாலும் முதலில் தென்படுவது அவருடைய டெம்ப்ளேட் தான். ஆனந்தவிகடனில் இந்தக் கதை தொடர்கதையாக வந்தது என்று நினைக்கிறேன் ஆரம்பத்தில் ஸ்டீபன் என்றொரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அதை ஹீரோ போல் கொண்டுசென்றிருப்பார். ஆனால் சட்டென்று சத்தியநாராயணன் அறிமுகம் ஆனதும் ஸ்டீபன் கதையில் இருந்து மறைந்துவிடுவார். இது எதனால் அப்படி நிகழ்ந்தது என்று தெரியாது. ஒருவேளை ஒருவரை மையமாக வைத்து கதை சொல்லும் வழக்கத்தை பாலகுமாரன் கழற்றி எறிய முயன்றிருக்கவேண்டும். எனக்கென்னமோ அந்த நாவல் சத்தியநாரயணா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதும் தான் சூடுபிடிப்பதாகப்படுகிறது.

அதே போல் நாவலின் background எப்பொழுதும் பாலகுமாரன் கதைகளில் மாறிக்கொண்டேயிருக்கும். அதற்கு அவர் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு விவரம் சேகரிப்பார் என்று நினைக்கிறேன். இது Sidney Sheltonன் அணுகுமுறை எனக்கு பாலகுமாரன் நாவல்களைத் தொடர்ந்து படித்துவிட்டு சட்டென்று சிட்னியின் நாவல் படிக்க முதலில் பட்டது இதுதான். Sidneyன் த மாஸ்டர் ஆப் த கேமை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், அதில் சிட்னி ஷெல்டன் மொத்தம் ஐந்து தலைமுறையை அலேக்காக வைரத்தில் வைத்து கொடுத்திருப்பார். அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தோன்றும் இதில் பாலகுமாரன் விமானநிலையத்தை மையமாக வைத்து நாவல் அமைத்திருப்பார்.

அந்த விமானநிலையத்தைப் பற்றிய விவரிப்புக்கள் கொஞ்சம் போல் ஒட்டாமல் இருப்பதாக எனக்கு இப்பொழுது படுகிறது. ஆனால் சட்டென்று விரியும் கதையில் எங்கேயும் பாலகுமாரன் சட்னியில் அரைபடாமல் தெரியும் பொட்டுக்கடலை போல் தெரியமாட்டார் என்பது தான் விசேஷம். கவனிக்கவும் இது அவருடைய மற்ற கதைகளுடனான ஒப்பீடே, எனக்கு என்னவோ இரும்புக் குதிரைகளைவிடவும் மெர்குரிப் பூக்களை விடவும் பயணிகள் கவனிக்கவும் பிடித்திருந்தது.

எனக்கென்னமோ பாலகுமாரன் தமிழ் சினிமாக்கள் சாதிக்காததை அந்த நாவலில் சாதித்திருப்பதாக தோன்றும்; எப்படியென்றால் ஒரு கன்னிகழியாத ஆண்(சொல்லகூடாதோ!) திருமணம் நடந்து பிள்ளை பிறந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாகக் காட்டியிருப்பார். பெரும்பாலான சமயங்களில் அந்தப் பையன் ஏற்கனவே கழிந்தவனாகவேயிருப்பான். இல்லை ஏதாவது கதை சொல்லி அந்தப் பெண் கன்னிகழியாதாவள் என்றொன்றைக் கொண்டு வருவார்கள். நான் மோகமுள் எல்லாம் படித்தது பிறகுதான்.

சரி கதைக்கு வருவோம், ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் விமானநிலையத்தில் பணி செய்பவர்கள். ஜார்ஜினா ஒரு குழந்தையுடன் வசிக்கும் இளம் விதவை. ஜார்ஜினாவின் கணவன் வின்சென்ட் விமானநிலையத்தில் வேலைசெய்து பணியில் இருக்கும் பொழுது நடைபெறும் குண்டுவெடிப்பால் இறந்துவிட ஜார்ஜினாவிற்கு அந்த உத்யோகம் கிடைக்கிறது. சத்தியநாராயணாவும் வின்சென்ட்டும் நண்பர்கள் சத்தியநாராயணன் வின்சென் ட்டின் மரணத்திற்கே தான் தான் காரணம் என்று நினைக்கிறான் – (ஓரளவிற்கு ஒத்துக்கொள்ளக்கூடிய விளக்கமாக எனக்குப்பட்ட இடம் இது) – அதனால் அவனால் ஜார்ஜினாவை வின்சென்ட் இறந்த பிறகு பார்க்கும் பொழுதெல்லாம் மனக்குழப்பம் உருவாகிறது. பின்னர் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எதிர்பாராதவிதமாக காதலில் விழுவதும் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்யும் பொழுது வரும் பிரச்சனையும் அதை எப்படித் தீர்த்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள் என்பதும் தான் கதை. சொல்லப்போனால் கதையை அப்படியே ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கலாம் தான். ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் சூப்பராயிருக்கும். இதில் எனக்கு மிகவும் பிடித்தது ஜார்ஜினாவும் சத்திநாராயணாவும் காதலில் விழும் பொழுது நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள். உரைநடை ரொம்பவும் நகைச்சுவையாக இருக்கும் சிரித்துக்கொண்டே படிக்கலாம். இந்த உரையாடல் என்னைப் பித்துபிடித்து அலையச் செய்தது என்றால் அது மிகையல்ல. எத்தனை தடவைகள் அந்த உரையாடல்களைப் படித்திருப்பேன் என்று நினைவில் இல்லை. என்னுடைய ஆரம்பகால கதைகளில்(குறிப்பாக – ஒரு காதல் கதை) பாலாவின் உரையாடல் தாக்கம் இருப்பதாக நான் நினைத்திருக்கிறேன் அதுவும் பயணிகள் கவனிக்கவுமின் தாக்கம். நான் டெல்லியில் இருந்த சமயங்களில் உருப்போட்டுக்கொண்டிருந்த உரையாடல்கள் எழுத்தில் பார்க்க ஒன்றரை ஆண்டு ஆயிற்று. அப்படி எனக்கு மிகவும் பிடித்த உரையாடல் பயணிகள் கவனிக்கவுமில் பாலா எழுதியவை.

அதேபோல் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எழுதிக்கொள்ளும் கவிதை இரண்டு. பாலா சொல்லியிருப்பார் வார்த்தையைக் கோர்த்து கோர்த்து கவிதை எழுதணும் தனக்கு ஃப்ரீ ஃபோலோவா எழுதினாத்தான் பிடிக்கும் அதனால் தான் கவிதையை விட்டுட்டு நாவல் எழுத வந்ததா! ஆனால் சிறுகதையும் நாவலுமே கூட இப்ப வார்த்தை வார்த்தையா கோர்த்துத்தான் எழுதணும்னு வந்ததால பெட்டர் வார்த்தைகளை கவிதைக்காகவே கோர்த்துப்போம்னு தான் இப்பல்லாம் கொஞ்சம் தீவிரமா கவிதை எழுதுறது. இந்தக் கவிதை அந்தக்காலத்தில் எனக்குப் பிடித்திருந்த கவிதைகள் வரிசையில் நிச்சயம் இருந்த ஒன்று. ஆனால் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் உட்கார்ந்தால் இதைப்போன்ற ஒன்றை நானே எழுதிவிடுவேன்னு நினைப்பதால் அதற்கான பாலாவின் தேவையைப்பற்றிய கேள்விகள் எழுகிறது.

எதிர்பாராதவிதமாக சத்தியநாராயணா அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவனுக்காக ப்ரார்த்தனை செய்யவரும் ஜார்ஜினாவை – சத்தி இயலாமையால் திட்டிவிட்டு எழுதுவதாய் இருக்கும் இந்தக் கவிதை.

என் மனசுக்குள்ளே சில நாய்கள்
புரண்டு கிடக்கும் எனைத் தின்று
என்றோ மூடிய மனக்கதவை
எவரும் திறக்க வரவேண்டாம்
திறக்க நினைக்கும் ஒற்றைகை
ஓசை கேட்டு அவை நிமிரும்
நெருங்க காலடி சத்தத்தில்
நிமிர்ந்து ரத்தப் பல் காட்டும்
என்னைத் தின்ற வெறி நாய்கள்
உங்களைத் துரத்த ஓடிவரும்
நானே கதவைத் திறந்தாலும்
நாய்கள் மடக்கும் வருபவரை
விதியெனும் கிழவன் எனக்குள்ளே
தள்ளிய நாய்களில் நானில்லை
நாய்கள் எந்தன் தலைமேலே
நானோ நாய்களின் காலின் கீழ்
ஒன்றாய் பெருகுது மனத்தீவில்
என்னைத் தின்று கண்மூடி
புரண்டு கிடக்குது என்னுள்ளே
நான் யாரிடம் பேச முயன்றாலும்
இந்நாய்களின் ஊளைத் தடுக்கிறது
என்னுள் விழுந்த இந்நாய்கள்
நான் சாகும் நேரம் தூங்கிவிடும்
அந்தக் கணத்தில் கைகுவித்து
கண்வழி கேட்பேன் மன்னிப்பை
நீர் இருக்கும் இடத்தின் திசை நோக்கி
நானே நானாய் கிடந்தபடி

சத்தி எழுதிய கவிதைக்கு பதிலாய் இதை ஜார்ஜினா எழுதுவாள்.

வெள்ளை அங்கி சுருள் தாடி
ஒரு யூதன் வந்தான் இவ்வுலகில்
வெளிச்சம் முகுந்த வானத்தின்
ஒளியைத் தேக்கி தன் முகத்தில்
மெள்ள நுழைந்தான் பூவுலகில்
கன்னி மேரியின் சிசுவாக,
உலகம் முழுவதும் பல நாய்கள்
மறித்துக் கேட்டன அவனெதிரே,
எதற்கு வந்தீர் இவ்விடத்தில்
என்ன வேலை மானுடத்தில்
மெள்ள சிரித்து யூதமகன்
கரத்தை நீட்ட அவை விலகும்
மனிதன் எங்கள் முழுப்படைப்பு
மக்கள் எங்கள் குழந்தைகள்
உருவம் அற்ற ஒளிப்பிழம்பாய்
இருக்கும் எங்கள் தேவபிதா
உருக்கிச் செய்த மானுடத்தை
நீங்கள் ஆளவிடமாட்டேன்
உலகம் என்னும் ஆலயத்தில்
ஒவ்வொரு மனிதரும் தீபங்கள்
உருட்டிக் கவிழ்க்க நீர் முயன்றால்
உங்களைச் சும்மா விடமாட்டேன்
உரத்துக் கத்தின அந்நாய்கள்
பயந்து நடுங்கின தீபங்கள்
நாய்களை உறுத்து பார்த்தபடி
மெள்ளத் திறந்தான் ஆலயத்தை
இடுப்புக் கயிற்றை அவிழ்த்தெடுத்து
சொடுக்கிப் போட்டான் புவியதிர
ஓடிப்போச்சு நாயெல்லாம்
தீபங்கள் எல்லாம் மகிழ்ந்தாட
ஒற்றைத் தீபம் தலை வணங்கி
யூதனை நோக்கி வினவியது
என்னைப் படைத்த கடவுள்தான்
நாயைப் படைத்தான் இவ்வுலகில்
எதிரெதிர் விஷயம் படைத்துவிட்டு
எதற்கு வந்தீர் விளையாட
துக்கத்தோடு புலம்பியதை
குனிந்து பார்த்தான் கனிவாக
மெள்ளத் திரியைத் தூண்டிவிட்டு
யூதன் சொன்னான் பொதுவாக
நாய்கள் குரைக்கா திருந்திருப்பின்
எம்மை விரும்பி அழப்பீரோ
இருளே இங்கு இல்லையெனில்
உமக்கு ஏதும் மதிப்புண்டோ
விருப்பம் என்பது முதல்கேள்வி
புரியாதிருப்பின் கேளுங்கள்
கேட்டவர்தானே வரம் பெறுவர்
தீபங்கள் வணங்கின தலை குனிந்து
ஏசு ஏசு என்றபடி என்னுள் கேட்டதை நான்
சொன்னேன்
நீயும் கேளேன் என் தோழா

ஆனால் எனக்கு பாலாவின் சத்தி வாஸக்டமி கடைசியில் செய்துகொள்வதாகச் சொல்லும் முடிவு பிடிக்கவில்லை எத்தனையோ முறை இது ஆணாதிக்க சிந்தனையாக இருக்குமோ என்று யோசித்துப்பார்த்திருக்கிறேன் விடை தெரியவில்லை. ஆனால் இப்படி மறுமணம் செய்துகொள்பவர்களுக்கு வாஸக்டமி நிச்சயமான தீர்வாய் இருக்கமுடியாதுதான். ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த பாலகுமாரனின் நாவல்களில் இது முக்கியமானது.

Wed, 31 Oct 2007 17:15:00 GMT

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s