அரசூர் வம்சம்

முதலில் ஒரு புத்தகம் நமக்கு எப்படிக் கிடைக்கிறது; என்ன அறிமுகத்துடன் கிடைக்கிறது என்கிற விஷயம் என்னைப் பொறுத்தவரை சுவாரசியமானது. இரா முருகனின் இந்தப் புத்தகம் கூட அப்படித்தான். நான் இணைய உலகில் பரவலாக நடமாடத் தொடங்குவதற்கு முன்பே இந்தப் புத்தகத்தைப் பற்றிய பெயரளவிலான அறிமுகம் கிடைத்திருந்தது. அது ஒரு சுவாரசியமானக் கதை என்பதால் அதை முன்னே சொல்லிவிடுகிறேன்.

எனக்கு கொஞ்சம் தூரத்து சொந்தமாய் ஒரு தாத்தா, காரைக்காலைச் சேர்ந்தவர் அவரிடம் இன்னமும் இருக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தும். Dictionary of Contemporary English என்ற புத்தகத்தைத் தேடி அவர் டெல்லியின் புத்தக சந்துகளைத் துளைத்தெடுத்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அதேபோல் சமீபத்தில் வெளியான சில துப்பாக்கிகளைப் பற்றிய புத்தகத்தையும் அவர் தேடி வாங்கிக் கொண்டு போனார். அப்படி அவருக்கு எங்கேயோ எவராலோ சொல்லப்பட்ட புத்தகம் தான் அரசூர் வம்சம்.

நான் இதைப் பற்றி இரா.முருகனுக்கு ஒரு மெய்ல் அனுப்பியதாக நினைவு.(முதலில் தவறுதலாக அந்த விஷயத்தை இராம.கி.க்கு பின்னூட்டமாக அனுப்பினேன் ;)) எனக்குத் தெரிந்து திருக்கடையூர், தில்லையாடி பக்கத்தில் ஒரு அரசூர் உண்டு. கொஞ்சம் போல் காரைக்கால் பக்கம் வரும், முதலில் தாத்தா அந்த ஊரைப் பற்றித்தான் கதை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லித்தான் அவர் இந்தப் புத்தகத்தைத் தேடினார். ஏனென்றால் அந்த அரசூரைப் பற்றி எழுதியிருந்தால் தன்னைப் பற்றி(அல்லது அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி) நிச்சயமாய் எழுதப்பட்டிருக்கும் என்று சொல்லித்தான் தேடினார்.

அவருடைய தேடுதலுக்கு கிடைக்காத அளவிற்குத்தான் அந்தச் சமயத்தில் அரசூர் வம்சம் இருந்தது. நானும் ஹிக்கின் பாத்தம்ஸில் தேடியிருக்கிறேன் சில சமயம்; ஆனால் அகப்படவில்லை. இப்படியாகக் கிடைத்த அறிமுகம் சிறிது நாளில் மறந்து போக, பிரகாஷ் ஏதோ ஒரு இடத்தில் உலக அளவில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் என்றோ இல்லை அதைப் போன்ற ஒன்றையோ சொல்ல அங்கிருந்துதான் கிளம்பியது அரசூர் வம்சம் இரண்டாவது தேடல். ஆனால் மிகச்சரியாக கூகுள் மூலமாக நான் திண்ணை நோக்கி வந்து சேர்ந்தேன். திண்ணையில் மின்னிதழாக கதையின் பாதி வரை முடித்திருந்தேன், ஆனாலும் என்னவோ ஒன்று குறைவது போலவேயிருந்ததால் புத்தகமாகவே வாங்கியதைப் பற்றி முன்பே சொல்லியிருந்தேன்.

நாவலைப் பற்றி என்னுடைய விமர்சனத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று முறை திரும்பத்திரும்ப புரட்டி இதை எழுதுகிறேன்.

“நீ ஆனாலும் புத்திசாலித் துருக்கண்டா கருத்தா.

அப்ப, சாது நாயக்கனாப் பாத்து ஆள் அமர்த்திக்கட்டா?”

இந்த வசனம் நாவலின் ஏதோ ஒரு பக்கத்தில் வருவது(280 பக்கம் வேண்டுமானால்). எனக்குத் தெரியவில்லை இதன் பின்னால் இருக்கும் “அரசியல்” எத்தனை பேருக்கு சுலபமாகப் புரியும் என்று. அரசியல் என்று குறிப்பிட்டது அதன் பின்னர் இருக்கும் விஷயத்தைப் பற்றி குறிப்பிடவே.

எங்கள் வீட்டிலெல்லாம் ஒரு பழமொழி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்கள். என்னவென்றால் “முட்டாத் துலுக்கனும் முரட்டு நாயக்கனும் சேர்ந்தா வேலைக்காகாது” என்பதுதான். வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கும் அது முட்டா துலுக்கனா, முட்டா நாயக்கனா என்பதைப் பற்றி. அவர் சொல்லியிருக்கும் அந்த மேற்கூரிய வசனத்திலும் கூட இந்த பழமொழியை அடிப்படையாக வைத்தே எழுதியிருக்கிறார். எங்கள் பக்கத்தைச் சேர்ந்த பழமொழி என்பதாலும் அடிக்கடி, “எங்க வீட்டாளுக(ஆம்பளை) டிஸிஷன் மேக்கிங்கில் தவறு செய்யும் பொழுதெல்லாம்”, எப்படியென்றால் பழமொழி மாற்றப்பட்டு; முட்டா நாயக்கனாகவும், முரட்டு துலுக்கனாகவும்.

நான் ஏன் இதை சொல்ல வருகிறேன் என்றால் இந்த பழமொழியைப் பற்றித் தெரியாத ஒருவர் நாவலைப் படிக்கும் பொழுது இந்த இரண்டு வரிகளை கடந்து போய்விடுவது எளிது; அதாவது விஷயம் புரியாமல். இப்படி நிறைய விஷயங்களை நுண்ணிப்பாக கவனித்து இந்த நாவலை எழுதியிருக்கிறார் இரா.முருகன். இந்த நாவலைப் படித்தவுடனேயே ரிவ்யூ போன்ற ஒன்றை எழுதிவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படிப்பட்ட ஒன்றை எழுதுவதற்கு முன்பு அதை இன்னும் இன்னும் மீள்வாசிப்பு செய்யப்படவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்.

நாவலின் உரையாடல் மொழி இடத்திற்கு இடம் மாறுபடுவதும் அந்த மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஒருவர் எழுதுவது போன்ற நடையில் அந்தப் பாகம் இருப்பதும் படிக்கப்போய் இந்த ஆளால் எப்படி மூன்று வித்தியாசமான உரையாடல் மொழிகளில் தேர்ச்சி பெற்று இருந்திருக்க முடியும் என்ற வியப்பே எழுகிறது. தமிழ்நாட்டு பிராமணர் பாஷை, கேரளாவை மையமாகக் கொண்ட பிராமணர்களின் பாஷை; பிறகு அந்தக் கால ஜமீன்களின் பாஷை கைவந்திருக்கிறது லாவகமாய். மூன்று வித்தியாசமான்ன கதைகளையும் கதைக்களன்களையும் பாத்திரங்களையும் அவர் தனித்தனியே எழுதியிருப்பதற்கான வாய்ப்பு இருந்தாலுமே வியப்பே மிஞ்சியிருக்கிறது.

பிறகு நாவலின் அடிப்படை நாதமாக இருக்கும் மேஜிக்கல் ரியலிஸம்; ராஜாவுடன்(ஜமீன்தார்) அவருடைய இறந்து போன முன்னோர்கள் பேசுவது, மூன்று தலைமுறைக்கு முன்னர் இறந்து போன ஒரு பெண்ணுடன் நிகழ்காலத்தில் இருக்கும் ஒருவன் கூடுவது இப்படி உதாரணத்திற்காக இரண்டு சொல்கிறேன். நாவல் பின்னப்பட்டிருக்கும் கதையில் மாந்தரீக யதார்த்தம் தான் மிகமுக்கியமான விஷயம்.

எங்கள் வீட்டில் என்னை வளர்த்த என் அப்பாவின் அம்மா இருந்தார்கள். நாங்கள் எங்கள் பாஷையில் “பாச்சம்மா” என்றுதான் அழைப்போம். எனக்கு அதற்கான அர்த்தம் அவ்வளவு எக்ஸாக்ட்டா தெரியாவிட்டாலும் ஒரு வகையில் பாட்டி என்று தான் வரும். அம்மா சின்ன வயதில் என்னை பாட்டியிடம் விட்டுவிட்டு டீச்சர் டிரைனிங் படிக்கப் போய்விட்டதால் என்னை வளர்த்தது எல்லாமே பாட்டி தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எனக்கெல்லாம் ரொம்பவும் முந்தைய ஜெனரேஷன் என்பதால் அந்தக் கால வழக்கப்படி ஆண் பிள்ளைக்குத் தான் அதிக சப்போர்ட் கிடைக்கும்; அவருடைய செல்லம் நான். எனக்குத் தெரிந்தே வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு என் சப்போர்ட்டாக வரும் ஆள்(ஒரே) அவர்தான். அந்தக் காலத்திலிருந்து அம்மா அப்பா இருவரும் அக்கா சப்போர்ட்.

அவருக்கு கடைசி காலங்களில் மனநிலை கொஞ்சம் தடுமாறியிருந்தது. அவருடைய கடைசி இரண்டு மூன்று ஆண்டுகள் அவருடன் இருந்தவன் என்ற முறையில் நிறைய விஷயங்களை நேரில் பார்த்திருக்கிறேன். அதாவது அவர் தன்னுடைய காலத்து மக்களிடம்(அனைவரும் இறந்தவர்கள்) பேசிக்கொண்டிருப்பது; எப்படி என்னிடம் அப்பா அம்மாவிடம் பேசுவாரோ அப்படி. உன்னிப்பாகக் கவனித்தால் அவரை சுற்றிலும் ஆட்கள் உட்கார்ந்து கொண்டோ இல்லை நின்று கொண்டோ, சுவற்றில் சாய்ந்து கொண்டோ பேசுவதைப் போல ஒவ்வொரு பக்கமும் திரும்பி அந்தந்த நபர்களின் பெயர்களைச் சொல்லிப் பேசிக்கொண்டிருப்பார்.

என்னால் கதையுடன் ஒன்றி படிக்க முடிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகயிருக்க முடியும். வேண்டுமானால் எங்கள் குடும்ப பின்னணி என ஒருவாறு கதை என் கண்முன்னே நடப்பதைப் போன்ற பிம்பம் உருவானது என்றே சொல்லலாம். மந்திரம் வைப்பது, அதை எதிர்க்க தகடு வைப்பது, சாப்பாட்டில் மருந்து போடுவது, குடும்பத்திற்கே சூனியம் வைப்பது போன்ற “டெர்ம்”கள் எங்கள் வீட்டில் சர்வ சாதாரணமாக புலங்கும் விஷயங்கள் தான். இதன் காரணமாக என்னால் இந்தக் கதையைப் பற்றிய கேள்விகளை விடவும் ஒன்றத்தான் சுலபமாக முடிந்தது.

இப்பொழுதெல்லாம் ஒரு புத்தகம் படித்தால் அதைப் பற்றிய விமர்சனத்தை எப்படி வித்தியாசமாக(என்ன கொஞ்சம் “A”த்தனமாக, சுத்திச் சுத்தி, கொஞ்சம் சுயத்தைச் சொறிந்து கொண்டு) எழுத முடியும் என்று தான் யோசிக்கிறேன்(;-)). ஆனால் இந்தக் கதையில் அப்படி எழுத முடியாத அளவிற்கு விஷயம்; என்னவென்றால் இந்த நாவல் முழுவதுமே கதையுடன் பின்னிப்பிணைந்து இருப்பது அடல்ஸ் ஒன்லி கண்டெண்ட் தான். கதையையும் இந்த விஷயத்தையும் தனித்தனியே பிரித்தறிவதென்பது ரொம்பக் கடினமான விஷயம்.(இதுவும் நான் இந்த நாவலை படிக்க ஒரு காரணம் என்று நான் சொல்லவில்லை :)).

கதையென்ற ஒன்று பெரிதாகக் கிடையாதென்றாலும் நாவலை நகர்த்திக் கொண்டு போவதற்கான கதை நிச்சயமாய் நாவலில் உண்டு. நாவலில் இருந்து பிடித்த வரிகளை பிடித்துப் போட்டு அது சொல்லும் விஷயங்களை விளக்க எனக்கும் விருப்பம் தான். ஆனால் இந்த நாவலில் வரும் எனக்குப் பிடித்த வரிகளையோ வாக்கியங்களையோ எடுத்துப் போட நான் நினைத்தால் அது வம்பாகிவிடும் எப்படியென்றால் அப்புறம் திண்ணை ஆட்களும் இரா.முருகனும் உதைக்கவருவார்கள் என்பதால் அப்படியே விட்டுவிடுகிறேன். ஆனால் எக்ஸாம்புள்காக இரண்டு விஷயங்கள்.

“குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதி மறைந்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ”

“முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா
கச்சு அகற்றிப் பழம் போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்”

இவையெல்லாம் நாவலின் இடையில் வரும் சில பாடல் வரிகள். சில படங்களைப் பார்த்துவிட்டு இந்தப் படத்தை எப்படி எடுத்திருக்க முடியும் என்ற வியப்பு ஏற்படும். அதைப் போல இந்தக் கதையை எப்படி எழுதியிருக்க முடியும் என்ற வியப்புத்தான் மேலெளுவதை தவிர்க்க முடியவில்லை. எல்லாம் கற்பனையாக இல்லாமல், எல்லாம் நிஜமாகவும் இல்லாமல் ஒரு எப்படி எழுதியிருக்க முடியும் என்று நாவலின் இரண்டு பக்கங்களை படிக்கும் பொழுது வியப்பளிப்பதாக இருக்கிறது.

“காலம், இராமனுடைய அம்பு அல்ல. திரும்பி வந்து அம்பாறாத்தூணியில் தூங்கும் பழக்கம் அதற்குக் கிடையாது. ஓயாது முன்னே சென்று கொண்டிருக்கும் அதைத் தடுக்கவோ அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை.

இலக்கியத்திலாவது காலத்தை நிறுத்தி, தட்டி, ஒடுக்கி முன்னும் பின்னும் ஓடச்செய்ய, காலம் காலமாகப் படைபாளிகள் முயன்று வந்திருக்கிறார்கள் ‘அரசூர் வம்சம்’ நாவலும் அப்படி ஒரு முயற்சியே” என்ற பி.ஏ கிருஷ்ணனின் முன்னுரை வரிகள் தான் மனதில் ஓடுகிறது கதைக்கான விமர்சனம் எழுதவேண்டும் என்று உட்காரும் பொழுது. காலத்தை நிறுத்தி, தட்டு, ஒடுக்கி முன்னும் பின்னுமாக எழுதியிருக்கும் இரா.முருகனின் எழுத்துக்களோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம்.

ஜமீந்தார் உப்பை தன் மடியில் கட்டிக்கொள்ளும் பொழுது நாம் பக்கத்தில் இருந்து பார்க்கிறோம். சுப்பம்மா கிழவி “அடல்ஸ் ஒன்லி” பாட்டு பாடும் பொழுது ஆரம்பத்தில் கேட்கத் தொடங்கி பின்னர் காதை பொத்திக் கொள்கிறோம். சாமிநாதனும் வசுமதியும் அறைக்குள்ளே “மேட்டர்” செய்யும் பொழுது கதவருகில் நின்று பார்க்கிறோம் பின்னர் சாமிநாதனோடு வீடு எரியூட்டப்பட்டதும் வெக்கையில் நிற்கமுடியாமல் “ஐயோ பாவம்” என்று அலறியடித்து வெளியேறுகிறோம். “உன் பரம்பரையே கிறிஸ்தியானியாகப் போறது” என்று கிட்டாவய்யனைப் பார்த்து பைராகி சொல்லும் பொழுது மனம் பதறுகிறது.

“ஆமா அப்பு, என்னத்துக்கு வம்பு. வாய்ச்சதப் பத்தி வக்கணையாத் தெரியும். இப்பப் பார்த்ததோட வச்சு அளந்தா, சுண்டு விரல் தண்டி சமாச்சாரம் எல்லாம் அதுல்ல சேத்தியா, அடச் சேன்னு வெறுத்துப் போயிடும் இல்ல.” என்று ஒரு கிழவி, புஸ்திமீசைக் கிழவனைப் பற்றி நக்கல் அடிக்க நாமும் சிரித்துக் கொள்கிறோம் இப்படி கதையினூடே நம்மையும் அழைத்துச் செல்லும் எழுத்து நடை இரா.முருகனுக்குச் சாத்தியமாகியிருக்கிறது. பொன்னியின் செல்வனுக்கும், என் பெயர் ராமசேஷனுக்கும் பிறகு புத்தகத்தை ஜஸ்ட் லைக் தட் பிரித்து படிக்கும் மற்றொரு புத்தகமாக எனக்கு அரசூர் வம்சம் கிடைத்திருக்கிறது.

நிச்சயமாக எழுத்துத் துறையில் கால் பதிக்கவோ இல்லை அதை நோக்கியோ நகரவேண்டும் என்ற ஆவல் இருக்கிறவர்கள் நிச்சயமாய் பலமுறை படிக்க வேண்டிய ஒரு புத்தகம் அரசூர் வம்சம் என்றால் அது மிகையாகாது.

12 thoughts on “அரசூர் வம்சம்

 1. மிகவும் நல்ல அறிமுகம். உங்களைப்போலவே நெடுநாட்களாக இந்த புத்தகத்தினை தேடிக்கொண்டே இருக்கிறேன்.இரா.முருகனின் “மூன்று விரல்” படித்துக்கொண்டிருக்கிறேன். அதனைப்பற்றியும் சிலாகிக்க நிறைய இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

  நன்றி.

 2. நன்றி மோகன்தாஸ்.. தேடிப் பிடித்து வாங்கிப் படித்து விடுகிறேன்..

 3. திண்ணையில் தொடர்ந்து வாசித்துக் கொண்டு இருந்தேன்.

  கதை என்று ஒன்றும் பெரிதாக கிடையாதா? உங்கள் அர்த்தத்தில் கதை உள்ள புத்தகம்தான் என்ன?

  //புத்தகத்தை ஜஸ்ட் லைக் தட் பிரித்து படிக்கும் மற்றொரு புத்தகமாக //

  மிகவும் உண்மை. அப்படி ஒரு நடை. புத்தகமாக படிக்க வாய்ப்பு இன்னும் வரவில்லை.

 4. சிவா, கிழக்கு பதிப்பகம் வெளியீடு இப்ப நிறைய புத்தகம் கிடைக்கிறது.

  உண்மைத்தமிழன் நிச்சயமாய்ப் படிக்கக்கூடியக் நாவல் தான்.

  ஸ்ரீதர் வாங்க, இப்பல்லாம் கதை இருக்கக்கூடாதென்றே வேண்டுமென்றே மக்கள் இதை மாதிரி கதை எழுதுவது. 😉 பழங்காலப் புத்தகங்களைப் பற்றி கேட்டீர்கள் என்றால், நிறையச் சொல்லலாம். ஏனென்றால் கதையில்லாத நாவல் அப்பொழுதெல்லாம் பெரும்பாலும் இருக்காது.

  இப்ப நாவல்களில் கேட்கிறீர்கள் என்றால் “புலிநகக்கொன்றை”யை சிபாரிசு செய்கிறேன்.

  நீங்கள் இரா.முருகனிடமே கூட கேட்டுப்பாருங்கள் அவரே சொல்லுவார் இந்த நாவலில் கதை என்ற ஒன்று பிரமாதமாகக் கிடையாதென்று.

 5. //மிகவும் உண்மை. அப்படி ஒரு நடை. புத்தகமாக படிக்க வாய்ப்பு இன்னும் வரவில்லை.//

  இதை நான் எழுத்தாளருக்குச் செய்யும் மரியாதை என்றே கருதி புத்தகம் வாங்குவேன். நீங்களும் செய்யுங்கள்.

 6. அவர் எனக்கெல்லாம் ரொம்பவும் முந்தைய ஜெனரேஷன் என்பதால் அந்தக் கால வழக்கப்படி ஆண் பிள்ளைக்குத் தான் அதிக சப்போர்ட் கிடைக்கும்; அவருடைய செல்லம் நான். எனக்குத் தெரிந்தே வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு என் சப்போர்ட்டாக வரும் ஆள்(ஒரே) அவர்தான். அந்தக் காலத்திலிருந்து அம்மா அப்பா இருவரும் அக்கா சப்போர்ட்.

  ஓகோ. இப்ப புரியுது.

 7. வணக்கம் டெஸ்டிங்க் செய்றேன் கண்டுக்காதீங்க

 8. எனக்கு இன்னும் அந்த புகையிலை வாசம்
  மூக்கிலேயே இருக்கு.படிச்சு ரொம்ப நாளாச்சு.அந்த தாசி பேரு என்ன கண்ணூ?
  அவளைப் பத்தியும் ஒரு வார்த்தை எழுதி இருக்கலாம்.

 9. தாமோதர் அவள் பெயர், கொத்தாக்குடி தாசி என்று நினைக்கிறேன்.

  எங்க வீட்டில் பொடி உண்டென்பதால் எனக்குப் பொடிவாசனை. 😉

 10. அருமை நிச்சயம் வாங்கிப்படிக்கணும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s