மக்கு குடும்பம்

அகிலா நேற்றுவரை அடக்கிக்கொண்டிருந்த கோபம் இன்று வெளிப்பட்டுவிட்டது. தாஸ் இப்படிச்செய்கிறவன் இல்லை தான், அது அவளுக்கும் நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது. ஆனாலும் மனம் சொல்பேச்சு கேட்க மறுக்கிறது. அகிலாவின் மனம் கண்டதையும் நினைத்து குழம்பியது. அவர்களின் முதல் சந்திப்பு அத்தனை இனிமையானது கிடையாது, கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் எதேச்சையாக கேன்டீன் பக்கம் போக தாஸ் தன் நண்பர்களிடம் அவளைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.

தாஸின் ஏதோ ஒரு நண்பன் அகிலாவைப்பற்றிக் கேட்க, தாஸ் சொன்ன பதில் அகிலாவை நிலைகுலையத்தான் செய்தது. அவன் அகிலாவை அயர்ன் பாக்ஸ் என்று கூறியதை கேட்டவளுக்கு அவனை கன்னம் கன்னமாய் அறையவேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியது. ஆனால் எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து விலகிவிட்டாள். ஆனாலும் தினமும் அவனை வகுப்பில் பார்ப்பதே வெறுப்பிற்குரியதாய் இருந்தது. எப்படி ஒரு பெண்ணைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் அவள் மாரைப்பற்றிய விமரினத்தை இவர்களால் வெட்கமில்லாமல் வைக்கமுடிகிறது என்பதை யோசிக்க தாஸின் மீது இருந்த வெறுப்பு அதிகமாகியிருந்தது.

அகிலாவின் நிலையை மெய்ப்பிப்பதைப் போன்றே சூழ்நிலைகளும் தொடர்ந்தது. தாஸ் தன்னுடைய நண்பர்கள் ராகிங்கிற்கு உள்ளாக்கப்பட்டதை எதிர்க்கும் நோக்கில், ஒரு புதன்கிழமை, அவனுடைய சீனியர் மாணவர்கள் டை அணிந்துவரும் அதேநாளில் பத்து பதினைந்து நாய்களுக்கு டைஅணிவித்து கல்லூரிக்குள் விட்டுவிட. கல்லூரி முழுவதும் பிரச்சனை ஆகியிருந்தது. கல்லூரி நிர்வாகம் தலையிட்டு அவனையும் அவன் நண்பர்களையும் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்ததில், சீனியர் மாணவர்கள் மகிழ்ந்தார்களோ இல்லையோ அகிலாவிற்கு சந்தோஷம் தாளவில்லை.

ஆனால் அகிலா எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக தாஸ் நன்றாய் படிக்கக்கூடியவனாயும், அதையும் விட நாடகம், விளையாட்டு போன்ற மற்ற துறைகளிலும் விற்பன்னனாக இருந்தான். இதன் பொருட்டாக அவன் மீது அகிலா கொண்டிருந்த அவமதிப்பு சிறிதளவு குறைந்திருந்தாலும் கோபம் சிறிதளவும் குறையவில்லை. சில மாதங்களிலேயே கல்லூரியின் தமிழ்மன்றத்தால் நடத்தப்பெற்ற பட்டிமன்றத்தில் எதிர்எதிர் தரப்பில் தாஸும் அகிலாவும் பங்குபெற, அகிலா தன் தரப்பிற்கு வைத்த ஏறக்குறைய அத்துனை வாதங்களையும் பொறுமையாய், அதே சமயம் ஆழமாய் நிராகரித்துப்பேச மலைத்துப்போயிருந்தாள். ஆனாலும் சில குறிப்பிட்ட காரணங்களால் அவனின் தரப்பு நன்றாய் பேசியிருந்தபொழுதும் தீர்ப்பு அகிலாவின் பக்கமாய் தரப்பட்டது.

என்னவோ அகிலாவிற்கு தாஸை பாராட்ட வேண்டுமென்று தோன்றியதால், பேசிவிட்டு கீழிறங்கியதும்,

“ம்ம்ம், நல்லா பேசினீங்க. ஆனா உங்கள் பேச்சில் இருக்கும் ஒழுக்கம் செயலில் இருப்பதாய் தெரியவில்லையே?”

அகிலா எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் தாஸிடம் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

“நன்றி, நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியலை.”

“இல்லை ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’னு பாரதி சொன்னான் ஆனால் இன்னும் மாதர்களையே கொளுத்தும் நிலைமைதான் நீடிக்குதுன்னு ரொம்ப அழகா பேசினீங்க. ஆனா உங்கள் செயல்களில் இதைக்காணோமேன்னு கேட்டேன். ஒரு பெண்ணோட மாரை கண்களால் அளவிட்டு நக்கல் செய்யும் நீங்கள் இது போன்ற தங்க வரிகளை பேசுவது மட்டும் ஏன்னு கேட்டேன். இதற்கான பதிலை நான் உங்கக்கிட்டேர்ந்து எதிர்பார்க்கலை. ரொம்பநாளா மனசுக்குள்ளேயே உறுத்திக்கிட்டிருந்த ஒரு நிகழ்வு அதான் கேட்டேன்.” சொல்லிவிட்டு தாஸினுடைய பதிலை எதிர்பார்க்காமலே வேகமாய் சென்றுவிட்டாள்.

பின்னர் வந்த ஓரிரு மாதங்களில் அவனாக அவளை சந்திக்க முயன்றதையும் அகிலா நிராகரித்தாள். இடையில் பல்கலைக்கழகத்தில் அவர்களுடைய கல்லூரியின் சார்பாக பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள தாஸை, கல்லூரி நிர்வாகம் தேர்ந்தெடுத்திருந்தது. அதற்காக நடந்த போட்டியில் அகிலா கலந்து கொண்டிருந்தாலும் அவன்தான் தேர்ந்தெடுக்கப்படுவான் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. அதைப்போலவே அவன்தான் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் போட்டிக்கு ஒருவாரத்திற்கு முன்னர் வண்டியில் இருந்து தாஸ் கீழே விழுந்ததால் போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில், நிர்வாகம் இவளைத் தேர்ந்தெடுத்தது.

அவனைப்போய் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் அவனுக்கு பதிலாய்த்தான் தான் பங்கேற்க இருப்பதால் அகிலா அவனை சந்தித்து அந்த விஷயத்தை தன்வாயால் சொல்லிவிட நினைத்தாள். இரண்டு நாட்களில் உடம்பில் ஏகப்பட்ட கட்டுக்களுடன் அவன் வகுப்பிற்கு வந்தவுடன் போய்ப்பார்த்தவள், அவன் காயங்களைப் பற்றி விசாரிக்காதவளாய்,

“உங்களுக்கு பதிலா நிர்வாகம் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கு. அதை உங்கக்கிட்ட சொல்லணும்னு நினைத்தேன்.” என்று சொன்னவளிடம்.

“அகிலா அன்னிக்கு நடந்த நிகழ்ச்சிக்கு நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதைத்தவிர வேறெதுவும் சொல்லக்கூடிய தகுதி எனக்கில்லை. மற்றபடிக்கு உங்களுக்கு அந்தப்போட்டிக்கான உதவிகள் எதாவது தேவைப்பட்டால் கேளுங்கள் செய்கிறேன்.” சொன்னவன் எதையோ யோசித்தவனாய்.

“இல்லை ஒருநிமிஷம் இருங்க.” சொல்லிவிட்டு அவன் பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்தவனாய்.

“தப்பா நினைக்காதீங்க, இதில இதுவரைக்கும் நான் பேசின அத்தனை பேச்சுப்போட்டிகளின் கன்டென்ட்டும் இருக்கு. ஒருவேளை இது உங்களுக்கு உபயோகமா இருக்கலாம்.”

அகிலாவிற்கு முதலில் அதை வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும், பின்னர் கல்லு\ரி நிர்வாகம் தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தருவாயில் அவனுடைய குறிப்புக்கள் நிச்சயமாய் உதவும் என்று நினைத்தவளாய் வாங்கிக்கொண்டாள். ஆனால்,

“இத நான் வாங்கிக்கிட்டதால உங்கமேல இருக்குற கோபம் குறைஞ்சிறுச்சுன்னு நினைக்காதீங்க.” என்று சொல்லிவிட்டுத்தான் சென்றாள்.

ஆனால் அவள் கோபம் சிறிது சிறிதாக குறையத்தான் செய்தது, அதுமட்டுமில்லாமல் தாஸ் மீதான ஒருவித ஈர்ப்பு உண்டாவதைப்பற்றிய விஷயத்தையும் அவளால் அதிக நாட்கள், அவள் மனதிற்கு கூடத்தெரியாமல் மறைத்து வைக்க முடியவில்லை. ஆனால், ஒரேநாளில் இந்த மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. அவன் நோட்டைப் படித்ததிலிருந்து அவன் வாசிப்பின் பரப்பை அறிய முடிந்தது. பிறகு முடியாத நேரத்திலும் பல்கலைக்கழகத்திற்கே வந்து அந்தப்போட்டியில் வெற்றிபெற அவளுக்கு உதவியது, பின்னர் அவனுடன் சிறிது சிறிதாக பழகத்தொடங்கியதும் அவன் பல பிரச்சனைகள் பற்றிய அவனுடைய கருத்துக்களை சாயங்கலக்காமல் வெளஇப்படுத்தியது இப்படி. தாஸ் சொல்லிச்சொல்லி அகிலா அவன் மேல் கொண்டிருந்த அவநம்பிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாய் தகர்த்தெறிந்தான்.

இப்படித்தொடங்கிய அவர்களின் நட்பு பின்னர் காதலாக மாறி, கல்லூரி வாழ்க்கையின் நான்காண்டுகளுக்கு பிறகும் தொடர்ந்து பின்னர் அவர்கள் இரண்டுவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு வந்து அவர்கள் திருமணமும் செய்து கொண்டனர். ஆயிற்று எட்டுமாதங்கள், நாளை அகிலாவிற்கு பிறந்தநாள், இப்பொழுது அகிலா கடுங்கோபமாய் இருப்பதற்கு காரணம் அவனாக தன் பிறந்தநாளை நினைவில் வைத்திருப்பான் என்று நினைத்திருந்தவளுக்கு முந்தையநாள் மாலைவரை அவனிடமிருந்து அதுபற்றிய குறிப்பெதுவும் கிடைக்கவில்லை. இன்னும் ஆறுமணிநேரம் தான் இருந்தது அவளுடைய பிறந்தநாளுக்கு,

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவனின் கைகளில் பிறந்தநாள் பரிசுப்பொருட்களைத் தேடியவளுக்கு அவன் ஒன்றுமே வாங்கிவராதவனாய் வெறுங்கையை வீசிக்கொண்டுவர கோபம் கோபமாய் வந்தது. அதுவும் வந்தவுடனேயே,

“அகிலா இன்னிக்கு என்ன சாப்பாடு, எனக்கு ரொம்ப பசிக்குது. நாளைக்கு சீக்கிரமா வேலைக்கு போகணும்.” சொன்னவனாய் பேண்ட், சட்டையைக்கூட கலட்டாமல் படுக்கையில் சாய்ந்தான்.

அதிலிருந்துதான் அகிலா பித்துபிடித்ததைப் போல் மாறியிருந்தால், அவள் நினைத்திருந்தால் அவள் கணவன் தன் பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து எதுவும் சர்ப்ரைஸாக பரிசளிப்பான் என்று, தன் பிறந்தநாளிற்காக விடுமுறை எடுத்துக்கொண்டுவந்து வெளியில் அழைத்துச் செல்வான் என்று. ஏனென்றால் அவர்கள் காதலித்த காலங்களில் இதெல்லாம் வழக்கம்தான், அசட்டுத்தனமாக எதுவும் செய்யாமல் ஜேஜே சில குறிப்புகள், உபபாண்டவம் போன்று அவளுக்கு முன்பே அறிமுகம் ஆகாத ஒன்றை அந்தநாளில் கொடுத்து அசத்துவான். பெரும்பாலும் அவர்களின் கருத்துப்பரிமாற்றம் பிரச்சனையில் தான் முடியும் ஆனால் அன்றுமட்டும் தான் என்ன சொன்னாலும் மறுக்கமாட்டான். இது போன்ற காரணங்களால் தான் திருமணம் ஆனபிறகு பழசையெல்லாம் மறந்துவிட்டான் என்று நினைத்து அகிலாவிற்கு கோபம் வந்தது.

முதலில் அவனிடம் ஒன்றுமே பேசாமல் சாப்பாடு போட்டவள், பின்னர் மெதுவாக நாளை தினத்தைப் பற்றி லேசுபாசாய் குறிப்பிட்டாள். ஆனால் அவனோ இதையெல்லாம் குறித்துக்கொள்பவனாக இல்லாமல், கருமமே கண்ணாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பின்னர் கைகழுவிவிட்டு படுக்கைக்கு வந்தவன் விளக்கணைத்துவிட்டு தூங்கத்தொடங்க, மொத்தமாய் குடிமுழுகிப்போனதாக நினைத்தவளாய்.

“தாஸ் நாளைக்கு எனக்கு பிறந்தநாள்.” சொல்லியேவிட்டாள்.

இதைக்கேட்டும் கொஞ்சமும் சுவாரஸ்யம் காட்டாதவனாய்,

“அப்படியா வாழ்த்துக்கள்.” சொல்லிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டான்.

அவளுக்கு இது பெருத்த ஏமாற்றத்தையளித்தது, எல்லோரும் சொல்வது போல் காதலிக்கும் வரைதான் அத்தனையும் போல என்று நினைத்தவளாய்.

“நாளைக்கு நாம ரெண்டுபேரும் கொஞ்சம் வெளஇய போகலாமா, எனக்கு கொஞ்சம் பர்சேஸ் பண்ணனும்.” இதையும் நேரடியாகக் கேட்டாள்.

ஆனால் திரும்பிக்கூட பார்க்காமல்,

“என் டெபிட், கிரெடிட் கார்ட் இரண்டும் உன்கிட்டத்தான இருக்கு, போய் என்ன வாங்கணுமோ வாங்கிக்க, வேணும்னா காரை விட்டுட்டு போறேன். நாளைக்கு முக்கியமான வேலையிருக்கு.”

இந்த பதிலால் விரக்தியானவளாக அவளும் படுத்துக்கொண்டாள், அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது அவன் நடந்துகொள்ளும் விதம். இப்படி நடந்துகொள்பவன் கிடையாது, இன்று அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையிருந்திருக்குமா என்று யோசித்தாள். அவள் நாளை விடுமுறை போட்டிருந்தது வீணாய்ப்போய்விட்டதை நினைத்துப்பார்த்தால். இதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப்போல் அவள் அவனுக்கு சர்ப்ரைஸாய் சொல்ல ஒரு விஷயம் வைத்திருந்தாள். அதை நினைத்தபொழுது தான் அழுகை அழுகையாய் வந்தது. அவள் மறுபக்கம் திரும்பிப்பத்த சிறிது நேரத்தில் அவள் அவள் இடுப்பில் கையைப்போட, கோபம் வந்துவிட்டது அகிலாவிற்கு.

“போங்க போய் ஆபிஸையே கட்டிப்பிடிச்சிக்கிட்டு தூங்குங்க அதுக்கு மட்டும் நான் வேண்டுமா?” சப்தம் போட்டாள்.

“இப்ப எதுக்கு நீ இப்படி கத்துற. நான் இதுவரைக்கும் உன் பிறந்தநாளுக்கு கூடவே இல்லாதமாதிரியில்ல கத்துற. ஏதோ கொஞ்சம் வேலையிருக்குன்னு சொன்னா புரிஞ்சிக்கமாட்ட. ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிற. அதான் என்ன வேணும்னா வாங்கிக்கன்னு சொல்லிட்டன்ல அப்புறமேன் தொட்டதுக்கெல்லாம் சிணுங்குற.” சொல்லியவனாய் அவளை அருகில் இழுத்தான்.

அவளுக்கும் சம்மதம்தான் ஆனால் தன் பிறந்தநாளை மறந்துவிட்டு, என்னவோ காசுதான் கொடுக்குறனேன்னு சொல்லும் புருஷனை நினைத்தால் எரிச்சலாய் வந்தது. இதே அவன் மட்டும் ஒன்றுமே வாங்கிக்கொடுக்காமல் புன்னகைத்தபடி பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு, நாளைக்கு வேலையிருப்பதாய் சொல்லியிருந்தால். அவனுக்காக எத்தனை மணியானாலும் காத்திருந்திருப்பாள். ஆனால் அன்று அவன் நடந்துகொண்ட முறை சுத்தமாய் அவளுக்கு பிடிக்கவில்லை.

அவன் அவள் அனுமதியில்லாமலே உடைகளை நீக்கிக்கொண்டிருந்தான். அவனையே வெறித்துப்பார்த்தவளாய் தடுக்காமல் கல்லைப்போல் படுத்திருந்தாள். தன்னிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லாவிட்டால் விட்டுவிடுவான்னு நினைத்த அவளின் எண்ணத்தை தகர்த்தபடி அவன் அவள் கண்களையே பார்க்காமல் முன்னேறிக்கொண்டிருந்தான். அவளால் இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை தன் விருப்பமில்லாமலேயே தன்னைப்பெற நினைக்கும் அவனை தடுக்க நினைத்தும் முடியாதவளாய், அவன் விருப்பத்திற்கு ஒத்துழைக்கவும் முடியாதவளாய், தான் இழந்துவிட்ட ஆடையின் இயலாமை பீடித்தவளாய், அவன் முதல் தொடுதலில் அழுதுவிட்டாள்.

அதுவரை முன்னேறிக்கொண்டிருந்தவன் அவள் அழுகை சப்தம் கேட்டதும் நிறுத்திவிட்டு சிறிதுநேரம் அவளையே பார்த்தான்.

“எந்திரிடீ.” அவன் அதட்ட,

படுக்கையிலிருந்து எழுந்தவளை அங்கிருந்து நேராய் உள்ளறைக்கு அழைத்துச் சென்றான். முதலில் அவனுடைய பீரோவைத் திறந்தவன் அங்கே மறைத்து வைத்திருந்த பட்டுப்புடவையை எடுத்துக்கொடுத்தான். அழுத கண்களுடன் இதையெல்லாம் அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தவளஇன் கையில், பின்னர் ஒரு சிறிய பிறந்தநாள் கேக்கை கொடுத்து சிறிய கத்தியால் வெட்டச்சொன்னான். வெட்டிய கைகளஇன் மோதிரவிரலில் அப்படியே ஒரு தங்க மோதிரத்தை அணிவித்தவனிடம்.

“ஏன் இப்புடி பண்ணீங்க?” இன்னும் அவளால் அழுகையை நிறுத்தமுடியவில்லை.

“சும்மா விளையாட்டுக்குத்தான், இதுதானே நாம கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கப்புறம் வர்ற உன்னோட முதல் பிறந்தநாள் அதான். நீ பிறந்தப்ப எப்புடி இருந்திருப்பேன்னு பாக்கலாம்னு…”

சொல்லிவிட்டு சிரித்தவனை அகிலா முறைக்க,

“இங்கப்பாரு ஆரம்பத்திலேர்ந்தே உனக்கு ஒரு விஷயமும் தெரியாது. காலேஜில் நான் உன்னைப்பத்தி கமென்ட் அடிக்க எம்மேல ரொம்பக் கோபமாயிருந்த ஞாபகமிருக்கா. அப்ப ஒருநாள் நீ என்கிட்ட நேருக்குநேராய் எப்படி உங்களால வெளியில பேசுறது ஒன்னாவும் செய்யறது ஒன்னாவும் இருக்க முடியதுன்னு கேட்டப்பவே நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சுட்டேன். பின்னாடி உன்கிட்ட பேசணும் பழகணும்னு தான். நான் வேணும்னே அடிப்பட்டுடதாய் பொய் சொல்லி உன்னை பேச்சுப்போட்டிக்கு போக வைச்சேன். அன்னைலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் நான் என்ன நினைச்சேனோ அதேமாதிரிதான் நீ செய்திருக்க.

என் மக்கு பொண்டாட்டி எப்பவுமே நான் நினைக்கிற மாதிரிதான் நினைப்பான்னு எனக்குத்தெரியும். அது இன்னிக்கும் ப்ரூப் ஆயிருக்கு. இந்தப்பொருளையெல்லாம் நான் ஒருவாரத்திற்கு முன்பே வாங்கிவிட்டேன் கேக்மட்டும்தான் புதுசு. அப்புறம் நாளைக்கு நான் லீவு போட்டாச்சு, உன்னைய அழுவவிட்டதுக்கு பரிகாரமா நாளைக்கு நீ என்ன கேட்டாலும் ஸாங்ஷன். எல்லாமே உன் உத்திரவுதான்.”

அவன் அவளை ஏமாற்றியதை பெருமையாக சொல்லிக்கொண்டிருக்க முதலில் சிரித்தவள் பிறகு,

“உண்மையிலேயே நான் ஏமாந்திட்டன் தான். உங்க மக்கு பொண்டாட்டி உங்களுக்காக இன்னிக்கு ஒரு சர்ப்ரைஸ் வைச்சிருந்தேன். ஆனா நீங்க காலேஜிலேர்ந்து என்னை ஏமாத்திட்டு வர்றதால உங்கக்கிட்ட சொல்லமுடியாது.” என்று சொன்னவளிடம் என்னவென்று கேட்டு, தாஸ் கெஞ்சத்தொடங்க. முதலில் கொஞ்ச நேரம் சொல்லாமல் அலட்டியவள்.

சிறிது நேரம் கழித்து, “உங்க மக்கு பொண்டாட்டி வயித்தில உங்க மக்குப்புள்ள வளருது.” சொன்னவளாக வெட்கம் தாளாமல் அவனைக்கட்டிக்கொண்டாள். முதலில் நம்பமுடியாதவனாய் அப்படியா அப்படியா என்று கேட்டவன், பின்னர் மெதுவாய் அவள் வயிற்றைத்தடவ உள்ளேயிருந்த இரண்டுமாத சிசு, ‘அய்யோ இப்படி ஒரு மக்குக் குடும்பத்தில் போய் பிறக்கப்போறமே’ என்று நினைத்துக்கொண்டு சிரித்தது.

———————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s