சுஜாதாவை கடத்தப்போறேன்

பெர்லின் – ஜெர்மனி

“சுஜாதாவை கடத்தப்போறோம்**.”

மோகன் சொன்னதும் வந்தியின் முகத்தில் வலது புருவம் உயர்ந்ததை தவிர வேறு எந்த உணர்ச்சி மாற்றமும் நிகழவில்லை.

“என்ன பிளான்? “

“அதே பழைய பிளான்தான்.”

“ம்ம்ம்… சொல்லு.”

“வழக்கம் போல நம்ம வேலையெல்லாம் முடிஞ்ச கடைசிநாள், கிளம்பறதுக்கு இரண்டு மணிநேரம் முன்னாடி, கடத்தப்போற இடம் கடற்கரை, அரைமணிநேர வேலை, வேலை முடிஞ்சதும் மூணு மணி நேரத்துக்கு ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்துட்டு கிளம்புறோம். அதுவும் தேவைப்பட்டாத்தான்.”

“வெப்பன்ஸ்?”

“ஒரு பிஸ்டல், இம்போர்ட்டட் மாஸ்க், ஒரு கார்.”

“மற்றபடி…”

“இந்த முறை ரொம்ப தூரம் போகமுடியாது, எந்த இடமும் வேண்டாம், அதனால நோ புக்கிங், எல்லாமே காருக்குள்ள தான்.”

“காருக்குள்ளயா?”

“ஆமாம் காருக்குள்ளத்தான். ஓகே டன். இப்ப உன்நேரம். நெகட்டிவ் கொஸ்ஸின்ஸ். “

“முதல் கேள்வி எழுத்தாளர் சுஜாதாவைக் கடத்தி என்ன செய்யப்போற. பணம்ங்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நம்மக்கிட்ட இல்லாத பணமா. வேற என்னதான் ரீஸன். “

“கொஞ்சம் கேள்வி கேட்கணும்.”

“எதைப்பத்தி?”

“கடவுளைப்பத்தி.”

“இதை கடத்திட்டு வந்துதான் கேட்கணுமா? நேரிலே போய்க்கேட்டா ஆகாதா. அவரும் நம்ம
ஆளுதானடா. “

“என்ன ஐயங்கார்னு சொல்றியா.”

“அதில்லைடா, அன்னிக்கு படிக்கலை ‘யாருப்பா அது மைக்ரோசாப்ட் நாங்கல்லாம் லினக்ஸ்’னு ஒரு ஆனந்தவிகடன்ல. நாமளும் லினக்ஸ்னு சொல்லுவோம். நம்ம பேக்ரவுண்டையும் சொல்லுவோம். நிச்சயமா பேசுவாருடா. அப்ப கேளு உன் கேள்வியெல்லாம். “

“அப்பிடிப்போனா ஒருவேளை அவங்க சொந்தக்காரங்க இருக்கலாம். இல்ல உதவியாளர்ன்ற பேர்ல ஒருத்தராவது இருக்கலாம், அவங்களுக்காக அவர் தன்னோட நிலையை மாத்திச் சொல்லலாம் இல்லியா. அதுனால நம்ம இடத்துல தனியா வைச்சிக்கேட்டா சொல்லுவார்ல. நாமயென்ன மிரட்டப்போறமா இல்ல வேற எதாவது பண்ணப்போறமா. அழகா உட்காரவைச்சி கேட்கப்போறோம். “

“அந்தக் கேள்விக்கு பதில் சொல்லமாட்டேன்னுட்டார்னா?”

“அவர்க்கிட்ட கேட்க கேள்விக்கா பஞ்சம். லினக்ஸப்பத்தி, ழ இயக்கத்தைப்பத்தி,
மைக்ரோசாப்ட், பில்கேட்ஸ், கமல், சங்கர், மணிரத்னம், அவரோட பேரன், இன்கம்டாக்ஸ், மேஜை நாற்காலிகள், க்வாண்டம், ரிலேட்டிவிட்டி, ஐன்ஸ்டீன், வெண்பா, கட்டறை கலித்துரை, ராமானுஜர், அர்த்த சாஸ்திரம், சாண்டில்யன், நாலாயிர திவ்ய பிரபந்தம், கொஞ்சம் டயாபடீஸ், நிறைய பைபாஸ் சர்ஜரி இப்பிடி எவ்வளவோயிருக்கு முக்கியமா அந்த ஒரு எழவும் தெரியாத ஓட்டிங் மிஷினைப்பத்தி. ஆனா ரொம்ப முக்கியம் கடவுள் பத்தியது தான்.”

“கடவுளைப்பத்தியென்ன கேட்கணும்.”

“எல்லா விஷயத்திலும் முடிவா ஒரு கருத்தை சொல்பவர் கடவுள் விஷயத்தில் மட்டும் ஒரு முடிவுக்கே வரமாட்டேங்குறார். அவர மாதிரி ஜினியஸ்ஸெல்லாம் கடவுள் இல்லைன்னு ஒத்துக்கிட்டா. சொல்லி வாதாடுறதுக்கு ஒரு ஆள் கிடைப்பாருல்ல. தனக்கு புரிந்த, தெரிந்துகொண்ட விஷயத்தை சுஜாதா எல்லார்க்கும் சொல்வார்னு நான் உறுதியாக நம்புறேன். அதனால தான் கேட்கிறேன். எவ்ளோபேர் கேட்டிருக்காங்க தெரியுமா. எங்ககிட்ட உன் நாத்திகத்தையெல்லாம் பேசாதே. சுஜாதா, சுஜாதான்னு சொல்றியே அவரே கடவுளை நம்புறார் தெரியுமான்னு. “

“இங்க பாரு தாஸ், அவரால சில விஷயங்களைத்தான் சொல்ல முடியும். முதல்ல மக்களுக்கு புரியுமான்னு பார்க்கணும். பத்திரிக்கைல ஒத்துக்குவாங்களான்னு வேற யோசிக்கணும். விகடன்லயே சில விஷயங்களை ஒத்துக்கலைன்னு அன்னிக்கு ஆதங்கமா இளமை விகடன்ல எழுதல. அதுமாதிரிதான் இதுவும். அதுவும் இது கடவுள் பத்தியது. ஒரு ஒரு தனிமனிதனுக்கும் இதைப்பத்தி கருத்து வேறயாயிருக்கும். அதான் அப்ப அப்ப சூசகமா எதாவது எழுதவார்.”

“என்ன எழுதுறார்?”

“காஸ்மாலஜியைப்பத்தி சொல்லும் போது அதன்மூலமாத்தான் பிரபஞ்சத்தின் ஆரம்ப கணங்களைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. அது வரை சென்று கடவுள் எங்கேயாவது ஒளஇந்திருக்கிறாரானு தேட முடிந்ததுனு சொல்லிட்டு இன்றுவரை அகப்படவில்லை சொல்லியிருக்காருல்ல, அப்பிடின்னா என்ன அர்த்தம். இல்லைன்னுதானே சொல்லவர்றார்.”

“அட நீ வேற ஒரு தடவை இப்பிடித்தான். அரியென்று சொல்வார்… அல்லாவென்று
சொல்வார்… அப்பிடின்னு ஆரம்பிக்கும் ஒரு கவிதை, முடிவுல கடவுள் என்று யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறேன்னு சொல்லி முடிப்பார் கவிஞர். இந்த கவிதையை குறிப்பிட்டுட்டு கீழே இவர் எழுதுறார் இதே நம்பிக்கையில் தான் நானும் வாழ்கிறேன்னு. இதுக்கு என்ன சொல்ற. அதனால நாம இரண்டுபேரும் பேசிக்கிறதால இதுக்கு தீர்வு கிடைக்கும்னு தோணலை. அது போகட்டும், போன தடவையைப்பத்தி என்ன விவரம் கிடைத்தது.”

“இல்ல அந்த நடிகை நடந்ததைப்பத்தி யாருக்கிட்டையும் சொல்லவேயில்லை, சொல்லப்போனா நம்ம இரண்டு பேரையும் ரொம்ப பிடிச்சுபோயிருக்கும்னு நினைக்கிறேன் அதனாலதான் அன்னிக்கு கேட்ட எல்லா கேள்விக்கும் பட்டு பட்டுன்னு பதில் சொல்லிச்சு. நாம மறுபடியும் நேர்ல போய்ப்பார்த்தா, நல்லாவே பேசும்னு நினைக்கிறேன்” சொல்லிவிட்டு வந்தியத்தேவன் சிரித்தான்.

“நாமன்னு ஏண்டா என்னையும் சேத்துக்குற, நீ போய்ப் பார்த்தான்னு சொல்லு, நம்ம அப்பா எப்பிடித்தான் உனக்கு இப்பிடி சரியான பேர் வைத்தாரோ வந்தியத்தேவன்னு சரியான வழிசல்டா நீ. புடிச்சபாரு ஒருத்தியை கடத்துறதுக்கு அதுக்கு நான் எவ்வளவோ தேவலை. “

“சரி சரி, ஆளு ரொம்ப வயசானவரு, ஏதோ இளமையா எழுதுரதால தப்பா நினைச்சுராத. அவரோட பாதுகாப்புக்கு…”

“எல்லாம யோசிச்சாச்சு, அதனாலத்தான் வெளியெடத்துக்கு போகாம காருக்குள்ளயேன்னு சொன்னேன். காரும் ஏதாவது பெரிய ஆஸ்பிடலுக்கு 100 மீட்டருக்குள்ளயே சுத்துறமாதிரி பார்த்துக்கோ.”

சென்னை – இந்தியா

“டேய் நல்லா பாத்தியா அதே இடம்தானே.” மோகன் கேட்க.

வந்தி சொன்னான் “அதே பெஞ்சும் தான், பேசாம பெஞ்சோட தூக்கிட்டு போய்டுவோமா.”

“நக்கலெல்லாம் போதும், நாளைக்கு கடத்தணும் ஞாபகம் இருக்கில்ல. சரி என்ன பண்ணப்போறோம் சொல்லு?”

“நான் கார்ல இருப்பேன், அவர் தனியா இருக்கிற எதாவது ஒரு சமயம், நீ பக்கத்தில போய்.
உன்கிட்ட இருக்கிற பிஸ்டலை எடுத்துக்காட்டி, இந்த மாதிரி உங்களை கடத்தப்போறோம்னு
சொல்லு. அப்புறம் காரைக்காட்டி அந்த வண்டியில இருக்கிற ஒரு நபர்கிட்ட லாங் ரேஞ்ச் ரைபிள் இருக்கு. சுத்தம் போடாம வந்திட்டீங்கன்னா. அரை மணிநேரத்தில விட்டிருவோம். இல்லைன்னா நடக்கிற எதுக்கும் நாங்க பொறுப்பு இல்லைன்னு சொல்லு. வந்துட்டார்னா நீ சொன்ன மாதிரி அரைமணிநேரம் அப்புறம் நேரா ஜெர்மனி. சுத்தம் போட்டுட்டார்னா ரெண்டு வழி. ஒன்னு ரெண்டு பேரும் தப்பிக்கணும். இல்லைன்னா ஒரு ஆள் தப்பிச்சு இன்னொரு ஆளை கேஸ்லேர்ந்து காப்பாத்தணும். சரியா?”

“சரிதான், சத்தம் போட்டுட்டார்னா நான் ஒரு கன் ஷாட் பண்ணுரேன். நீ வந்திடு. ஜன
நடமாட்டம் அதிகமா இருக்கிற இடத்தில என்னை இறக்கி விட்டுட்டு. நீ இன்னொரு இடத்துல இறங்கிட்டு வேஷத்தயெல்லாம் களைச்சிட்டு ஸே·ப்க்கு போய் உன்னுடயதெல்லாம் எடுத்துக்கிட்டு நேரா ஏர்போர்ட் வந்திரு. ஓகே வா?.”

ஆறு மணி – சென்னை கடற்கரை

எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. சுஜாதா வந்து அந்த பெஞ்ச்சில் உட்கார்ந்து சிறிது
நேரம் ஆகிவிட்டது. அந்த இடத்தை நோக்கி மோகன் போய்க் கொண்டிருக்க, சிறிது நேரத்தி
ல் அந்த இடத்தில் கொஞ்சம் பரபரப்பு மோகன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி தூக்கி காட்டுகிறான். இது பிளான் கேன்சல் ஆகிவிட்டதிற்கான சிக்னல். இதையெல்லாம் சிறிது தூரத்தில் காரிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் காரை அந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்றான்.

எட்டு மணி – ஜெர்மன் விமானம்

என்ன வேண்டுமெனக் கேட்டக் கொண்டிருந்த ஜெர்மானிய பணிப்பெண்ணிடம் வழிந்துவிட்டு,

“என்னதாண்டா ஆச்சு?” என்று கேட்டான் வந்தியத்தேவன்.

“யாரோ அவரோட செல்போனை சுட்டுட்டாங்க, அந்த இடம் கொஞ்சம் பரபரப்பாகிவி
ட்டது. அதனால இப்ப கடத்தவேணாம்னுதான் கேன்ஸல் பண்ணிட்டேன். எங்க போய்வி
டப்போறார். அடுத்த முறை அந்த பெஞ்சோட தூக்கிருவோம்.” சொல்லிவிட்டு சிரித்தான் மோகன்தாஸ்.

“சரி நாம கடத்தி, நீ அந்த கேள்வியை கேட்டிருந்தா அவர் என்ன பதில் சொல்லியிருப்பாருன்னு நினைக்கிற?”.

“ரிட்டையர் ஆகி, உனக்கும் பைபாஸ் ஆபரேஷன் பண்ணினா தெரியும்னு சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்.” சொல்லிவிட்டு கீழே தெரியும் கடலைப்பார்த்து மீண்டும் சிரித்தான் மோகன்தாஸ்.

வந்தியத்தேவன் ஜெர்மானிய விமானப்பணிப்பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்தான்.

** திரு ரங்கராஜன் அவர்கள் ஆனந்தவிகடனில் அவருடைய செல்போன் தொலைந்ததைப் பற்றி சொல்ல, மனதில் தோன்றிய ஒரு சிறு புனைவு. இது ஒரு மீள்பதிவு. ஒவ்வொரு முறை இந்தக் கதையைப் பார்க்கும் பொழுதும், இந்தக் கதைக்கு மரத்தடியில் பெற்ற விமர்சனங்கள் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. இந்தச் சமயத்தில் இப்படி ஒரு மீள்பதிவு தேவையா என்று நினைத்தவாறே தான் பதிவிடுகிறேன்.

One thought on “சுஜாதாவை கடத்தப்போறேன்

  1. நீ எவ்வளவு சொன்னாலும் திருந்தவே மாட்டியா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s