தாதா கண்ணில் காந்தி! – ஞாநி

காந்தியை எல்லோரும் மறந்துவிட்ட வேளையில், இந்திப் படம் ‘லகே ரஹோ முன்னாபாய்’ மறுபடியும் அவரைப் புதிய தலை முறையின் ஹீரோவாக முன்னிறுத்தி இருக்கிறது என்று ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன.

இது போல, சினிமாவால் ஒரு சமூகத்தில் நல்ல மாற்றங்கள் வர முடியுமா என்ன?

‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’ படத்தைவிட இது இன்னும் பெரிய ஹிட் என்பது உண்மை. மும்பை தியேட்டர்களில் படம் முடிந்ததும் ஆடியன்ஸ் மொத்தப் பேரும் எழுந்து நின்று கை தட்டியதை நேரில் பார்த்தபோது கமர்ஷியல் சினிமாவுக்குள் நுழையத் தயங்கும் எனக்கே, இதை உடனே சென்னை சென்று அடுத்த வாரமே தமிழில் தயாரித்து இயக்கி வெளியிட்டுவிட வேண்டுமென்று பரபரப்பு ஏற்பட்டது (ரீ-மேக் உரிமை விலை 6 கோடியாம்).

எளிமையான கதை. ஆனால், மிகவும் புத்திசாலித்தனமாகவும் சுவாரஸ்யமாகவும் அமைக்கப்பட்ட திரைக்கதை. பண்பலை வாயாடியான (எஃப்.எம். ரேடியோ ஜாக்கிக்கு தமிழ்!) ஹீரோயினை(வித்யாபாலன்) கவர்வதற்காக, அவள் நடத்தும் காந்தி பற்றிய லைவ் க்விஸ் நிகழ்ச்சியில், சரியாகப் பதில்கள் சொல்ல தாதா முன்னாபாய் தன் அதிரடி வழிகளில் முயற்சிக்கிறான். ஜெயிக்கிறான். காதலுக்காக காந்தியில் காட்டிய ஆர்வம், அவனை காந்தியவாதியாகவே ஆக்கிவிடுகிறது.

இன்றைய நடைமுறை பிரச்னைகளுக்கெல்லாம் எப்படி காந்தியைப் பின்பற்றலாம் என்று ரேடியோவில் யோசனைகள் சொல்கிறான். (பென்ஷன் பேப்பரில் கையெழுத்திட லஞ்சம் கேட்கும் அதிகாரியிடம், ஒரு முதியவர் தன் ஜட்டி தவிர, எல்லா உடைகளையும் அவிழ்த்துக் கொடுத்துவிடுகிறார். வீட்டுச் சுவரில் தினசரி வெற்றிலை எச்சில் துப்பும் மாடி வீட்டுக்காரரிடம் சண்டை போடாமல், தினமும் அவர் துப்பியதும் சுவரைக் கழுவிவிடும் காந்தியம், எச்சில் பார்ட்டியை வெட்கப்படுத்தித் திருந்தவைக்கிறது.) ஹீரோவின் காந்திய யோசனைகள் எல்லாம் ஒர்க் அவுட் ஆகின்றன. கடைசியில் காதலியை மட்டுமல்ல, வில்லனையும் காந்திய வழியில் ஜெயிக்கிறான்.

இந்தக் கதையில் ஹீரோ சஞ்சய் தத்தும், அவரது அடியாளாக வரும் அர்ஷத் வார்சியும் நடிப்பில் கலக்குகிறார்கள். படத்தின் ஹை லைட்… ஹீரோவை அசல் காந்தி வந்து அடிக்கடி சந்தித்து யோசனைகள் சொல்வதுதான்! அவன் கண்ணுக்கு மட்டும் காந்தி தெரிகிறார். எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிட்டால், ரொம்ப நல்லது என்பதுதான் படத்தின் மெஸேஜ். இந்த சீரியஸான மெஸேஜை காமெடியாகச் சொல்லியிருப்பது ஆடியன்ஸ§க்குப் பிடித்து விட்டது.

பல ஆங்கிலப் பத்திரிகைகள், மும்பை யின் அன்றாடச் சிக்கல்களுக்கு எப்படி காந்தி வழியை முன்னாபாய் ஸ்டைலில் பின்பற்றலாம் என்று வாசகர்களுக்குப் போட்டிகள் வைத்திருக்கின்றன. ஆட்டோ சிக்கல் முதல் ஆபீஸில் லஞ்சம் வரை வாசகர்கள் பல காந்தியத் தீர்வுகளை எழுதி அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். மும்பைப் பேச்சு மொழியில் இருக்கும் இந்தப் படம், மும்பைவாசி களுக்கு மிகவும் பிடித்துவிட்ட நிலையில், மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் (ஆயுதம் வைத்திருந்த தாகக்) குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் சஞ்சய் தத்துக்கான அனுதாபம் அதிகரித்து வருகிறது. சஞ்சய் தத் அசலாகவே ஓர் இளகிய மனதுடைய காந்தியவாதிதான் என்று கூடப் பலரும் நம்புகிறார்கள்.

இதே போல ஒரு நல்ல மெஸேஜை தெலுங்கு சினிமாவின் கார மசாலாவுடன் குழைத்துச் சொல்லியிருக்கும் ஒரு படத்தையும் அண்மையில் பார்த்தேன். சிரஞ்சீவி நடித்திருக்கும் ‘ஸ்டாலின்’. தமிழ்நாட்டு ஏ.ஆர் முருகதாஸ் படைப்பு. மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் எம்.எல். எம். ஐடியாவை சமூக அக்கறையுள்ள விஷயத்துக்குப் பொருத்திப் பார்த்திருக்கிறார்.

ஸ்டாலின், எல்லா சக மனிதர்களுக்கும் நெருக்கடியான நேரத்தில் உதவி செய்யும் சுபாவம் உள்ளவன். உதவி பெற்றவர் ‘தேங்க்ஸ்’ சொன்னதும், ‘தேங்க்ஸ் சொல்லாதே! நெருக்கடியான சூழலில் இருக்கும் மூன்று பேருக்கு உதவி செய். இதே யோசனையை அவர்களுக்கும் சொல்லி அனுப்பு!’ என்கிறான்.ஒவ்வொருத்தரும் தலா மூன்று பேருக்கு… அந்த மூவரும் தலா மூன்று பேர் வீதம் ஒன்பது பேருக்கு என இந்த உதவி செய்யும் கலாசாரம் பெருகி, முழு சமூகத்தையும் அரவணைத்து விட்டால் எவ்வளவு நல்லது என்பது ஒரு சுகமான கனவு!

அதைத் தெலுங்கு ஸ்டைல் அடிதடி, குலுக்கல் ஆட்டங்களுடன் சொல்லியிருப்பது மசாலா ஆடியன்ஸ§க்கு நிறை வாகிவிட்டது.

இந்தப் பாணி படங்கள் பெரும் வெற்றி அடைவதற்கு அடிப்படையான காரணம், நம் சமூ கத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் மக்களைக் கைவிட்டு விட்டதுதான். எனவே, வேறு ஏதாவது ஒரு அதிசயம் நடந்துவிடாதா என்று ஏங்கிக்கிடக்கும் மனங்களுக்கு இவை ஆறுதலாக இருக்கின்றன.

சுமார் 30 வருடங்கள் முன்பு இந்தியில் வெளியான ‘சத்யகாம்’ (தமிழில் ‘புன்னகை’) படத்திலும், ஹீரோ காந்தியவாதிதான். எந்த நிலையிலும் உண்மை தான் பேசுவேன், நேர் மையாகவே இருப்பேன் என்று சொல்லும் அந்த ஹீரோ, படம் முழுக்க அடுக்கடுக்கான கஷ்டங்களையே அனுபவிப்பான். ஆனால், முன்னாபாய்&2 நம் அன்றாடக் கஷ்டங்களை எல்லாம் காந்தி வழியில் தீர்க்கலாம் என்று காட்டுகிறான். கஷ்டப் படுகிற ஹீரோவை யார் ரோல் மாடலாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள்? ‘அதெல்லாம் காந்திக்கு தான் முடியும். நமக்கு முடியாது’ என்கிற சராசரி ரியாக்ஷனைத் தலைகீழாகப் புரட்டியிருக்கிறார் முன்னாபாயின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி.

சஞ்சய் தத் & அர்ஷத் ஜோடி போல தமிழில் முன்னாபாய்&2 செய்ய யார் இருக்கிறார்கள்? மறுபடியும் கமல் & பிரபு? அல்லது, ரஜினி & வடிவேலு? விஜய் & விவேக்? அஜீத் & ரமேஷ்கண்ணா? ம்ஹ¨ம்! என் சாய்ஸ்… ஸாரி, நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் மட்டுமே சொல்லு என்கிறார் என் அருகே உட்கார்ந்திருக்கும் காந்தி!

படத்தைப் பற்றிய என் விமர்சனம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s