சிம்மேந்திரமத்யமமா? கீரவாணியா?

சொந்தக்காரர்கள் முதற்கொண்டு எங்களைப் பார்க்கிறவர்களெல்லாம் சொல்வதுண்டு, இரண்டு பேருக்கும் சரியான ஜோடிப் பொருத்தமுன்னு ஆனால் நாங்கள் எங்கள் இரண்டு பேருக்கும் எல்லா விஷயத்திலும் எதிர் எதிர் கருத்துக்கள் தான். இருவருடைய அணுகுமுறையும் முற்றிலும் வேறுவேறாய் இருக்கும். நான் அகிலாவை பொண்ணு பார்க்க போனப்ப நடந்தது இன்னிக்கு நினைச்சாலும் விழுந்து விழுந்து சிரிக்கத் தூண்டும் ஒரு நிகழ்ச்சி.

அம்மா இப்படி அகிலான்னு ஒரு பிராமணப் பொண்ணு இருக்கு, பாவம் கஷ்டப்படுற குடும்பம் அவங்க அப்பாவை உங்க நைனாவுக்கு ரொம்ப நாளாத் தெரியும், நம்ம பக்கத்தில் இப்படி பண்றதில்லைன்னாலும் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா தெரியுது அப்படி இப்படின்னு சொல்லி பெண் பார்க்க இழுத்fதுச்சென்றார்கள்.

அப்பொழுது நான் இருந்த மனநிலையில் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றியே கூட எனக்கு நல்ல எண்ணம் கிடையாது. பாச்சுலராய் கணிணித் துறையில் அத்தனை நல்ல விஷயங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவனுக்கு. திருமணம் என்ற புதைகுழியில் தள்ள இவர்கள் நினைப்பதாகவேப் பட்டது. பெண்ணை பார்க்காமலே எப்படியாவது இந்த முயற்சியை தவிர்த்துவிட நினைத்தேன். அதையே செய்யும் செய்தேன்.

“உங்களுக்கு கேயாஸ் தியரி தெரியுமா?” பார்க்க பதுமை போல் இருந்த அவளை பேசாமல் கல்யாணம் செய்து கொள் என்று இதயம் சொல்ல, இதயம் சொல்றதைக் கேட்டு வேலைசெய்ய ஏற்கனவே ஒருத்தர் இருக்காரு அவர் செய்வார் நாம மூளையைக் கேட்டு வேலைசெய்வோம் என்று நினைத்தவனாய் அவளிடம் தனியாய் பேசவேண்டும் என்று அழைத்து வந்து கேட்ட முதல் கேள்வி, அவள் திருதிருவென்று விழிக்க மனதுக்குள் சிரித்தவனாய்,

“ஆம்ப்ரோஸ் பியர்ஸ் தெரியுமா?” அவள் அதற்கும் விழிக்க, “அவர் விதி பத்தி என்ன சொல்றார்னா, ‘விதி என்பது சர்வாதிகாரிகள்…’” ஏதோ சொல்லவருவதைப் போல் ஆரம்பித்துவிட்டு, “பச்…” சொல்லி நிறுத்தினேன்.

பின்னர், “இங்கப்பாருங்க நான் கொஞ்சம் வித்தியாசமான ஆளு, கம்ப்யூட்டர்ஸில் இருந்தாலும், செகுவாரா, குவாண்டம் கம்ப்யூட்டிங், ஸ்டிரிங் தியரி, கொஞ்சமா கம்யூனிஸம், நிறைய கிரிக்கெட்னு இருக்கிற ஆளு. உங்களைப் பார்த்தா வித்தியாசமா இருக்கீங்க…” நான் முடிக்காமல் இழுத்துக் கொண்டிருக்க, அவள் முதன் முறையாய் பேசினாள்.

“நான் உங்கக்கிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?” கொஞ்சம் வித்தியாசமாய் உணர்ந்தாலும், “பரவாயில்லை கேளுங்க” என்று சொன்னதும்.

“நான் ஒரு ராகத்தை ஆலாபனை செய்தால் உங்களால் அது சிம்மேந்திரமத்யமமா கீரவாணியான்னு சொல்ல முடியுமா?” அவள் எதிர்கேள்வி கேட்க, ராகம், ஆலாபனை, சிம்மேந்திரமத்யம், கீரவாணி போன்று சொற்களை முதல்முறையாக கேட்ட குழந்தையாக நான் திருதிருவென முழிக்க,

“பொரிவரித் தடக்கை வேதல் அஞ்சி
சிறுகண்யானை நிலம் தொடல் செல்லா
வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே
அன்ன ஆர் இடையானும்
தண்மை செய்த இத்தகையோள் பண்பே – இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்ல முடியுமா உங்களால?”

எனக்கு ஒருமாதிரி எங்க அம்மா மேல கோபம் கோபமா வந்தாலும், நல்ல வேளை இந்தப் பொண்ணுக்கும் நம்மளை பிடிக்கலை போலிருக்கு, அம்மாதான் இந்தப் பொண்ணையும் வற்புறுத்தியிருக்கணும். இதுவும் நல்லதாப் போச்சு என்று நினைத்தவனாய்.

“நீங்க சொல்றதும் சரிதாங்க, நீங்க கேட்டது இரண்டுக்குமே என்னோட பதில் முடியாதுங்கிறதுதான். நம்ம இரண்டு பேரோட ஒப்பீனியனும் வித்தியாசமாயிருக்கு…” சொல்லிவிட்டு நான் முடிக்கமுடியாமல் திரும்பி நடக்கத்தொடங்கினேன்.

“ப்ளிஸ் கொஞ்சம் நில்லுங்க.” அவள் சொல்ல திரும்பியவனிடம், “உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன். அப்படின்னா ஒன்னும் பிரச்சனையில்லை, ஆனா நான் உங்களை கேள்வி கேட்டதனால தப்பா நினைச்சிட்டீங்கன்னா சில விஷயங்களை விளக்குறது என்கடமை.”

சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தியவள்,

“நான் உங்கக்கிட்ட அந்த கேள்விகளை கேட்டதுக்கு காரணம் உங்களை விட நான் புத்திசாலின்னு நிரூபிக்கிறதுக்கோ இல்லை உங்களை தட்டிக்கழிக்கிறதோ நிச்சயமா காரணம் கிடையாது. நான் சொல்லவந்தது ஒன்னே ஒன்னுதான், எனக்கு தெரியாததை நீங்க சொல்லித்தாங்க, உங்களுக்கு தெரியாததை எனக்கிட்டேர்ந்து கத்துக்கோங்க.

ஒரே மாதிரி ஒப்பீனியன் உள்ளவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா சீக்கிரமே வாழ்க்கை போரடிச்சிடும்.” ஒரே மூச்சாய் பேசிவிட்டு அவள் அழகாய் சிரிக்க ஒரு மாதத்தில் எங்களுக்கு திருமணம் நடந்தது. முதலிரவில்,

“அகிலா நான் உன்னை பெண் பார்க்க வந்திருந்தப்ப ஒரு பாட்டு சொல்லி அதுக்கு அர்த்தம் கேட்டல்ல அதுக்கு என்ன அர்த்தம்?”

“அதுவந்து ஓதலாந்தையார் அப்படிங்கிறவர் எழுதின பாட்டு, ஐங்குறுநூறுல பாலை பிரிவில் வரும். அர்த்தம் என்னன்னா ‘மூங்கில் உலர்ந்து வாடும் கோடை கால வெயிலுக்கு அஞ்சி சிறிய கண் யானை தன் புள்ளிபோட்ட தும்பிக்கை தரையைத் தொடாமலேயே நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கோடைகாலத்திலும் அவளை நினைத்தால் குளிர்ச்சி’ அப்படின்னு அர்த்தம் வரும் அந்தப்பாட்டுக்கு.” அவள் சொல்லச் சொல்ல ஆன்னு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அன்றிரவு முழுவதும் வெறும் பாடல்களுடனே கழிந்தது. எனக்காக அகிலா தனக்கு மிகவும் பிடித்த சில சுசீலா பாடல்களை அன்றிரவு முழுவதும் பாடிக்கொண்டிருந்தாள்.

இன்றைக்கு என்னிடம் பேசவும் கூட மறுத்து திருப்பிக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவளிடமிருந்து எதையுமே நான் மறைத்தது கிடையாது. இது நான் செய்ததற்கான தண்டனை. நாங்கள் போடாத சண்டையா, ஒரு வருடம் இருவரும் பேசிக்கொள்ளாமல் வேறுவேறு வீடுகளில் தனித்தனியாய் அய்யோ நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை, அந்த நாட்களை நல்லவேளையாய் எல்லாம் சரியாய்விட்டது.

பக்கத்து அறையில் பாட்டியுடன் தூங்கிக்கொண்டிருந்த பவானி எழுந்துவந்து,

“நைனா தூக்கமே வரலை. ஏதாச்சும் கதைசொல்லுங்க.” என்று சொல்லி நச்சரிக்க, இருந்த வெறுப்பில் “டேய் மரியாதையாய் நீயே போய் படுத்து தூங்கிறு இல்லை அவ்வளவுதான்.”

நான் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, பக்கத்தில் படுத்திருந்த அகிலா எழுந்து என்னை முறைத்துவிட்டு,

“எத்தனை தடவை சொல்லியிருக்கேன், குழந்தைக் கிட்ட இப்படி பேசாதீங்கன்னு. எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா. நீவாடா செல்லாம் அம்மா கதை சொல்றேன். ஒரு ஊர்ல தம்புடு தம்புடுன்னு ஒரு முட்டாள் இருந்தானாம்…” அவள் சொல்லத்தொடங்க எனக்கு கோபமும் சிரிப்பும் சேர்ந்துவந்தது.

சின்னவயதில் வீட்டில் என்னை தம்புடுன்னு கூப்பிடுவது வழக்கம். இது அவளுக்கும் தெரியும் கொஞ்சம் மஜாவான நாட்களில் அவளும் அப்படித்தான் கூப்பிடுவாள். இன்னிக்கு கோபத்தில் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாள்.

……

PS: சில விஷயங்கள் சில இடங்களில் இருந்து எடுத்திருக்கிறேன்,
நன்றி அம்பலம்.காம், மரத்தடி.காம்

One thought on “சிம்மேந்திரமத்யமமா? கீரவாணியா?

  1. இராகவன், இதில புரியாததுக்கு ஒன்னுமில்லைன்னு நினைக்கிறேன். இது பல சிறுகதைகளின் ஒட்டுமொத்த வடிவம் அவ்வளவுதான். கதையில் கொஞ்சம் கொஞ்சம் தொடர்பும் இருக்கும். மற்றபடிக்கு கொஞ்சம் மாற்றி தனித்தனி சிறுகதைகளாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s