பல்வேறு கருத்துக்கள் பற்றி ஜெயகாந்தன் பதில்

“காசிப்’ எனக்கு பிடிக்காது; பூசுற்றல் வேண்டவே வேண்டாம் !: பல்வேறு கருத்துக்கள் பற்றி ஜெயகாந்தன் பதில் தமிழ் எழுத்தாளர்களில் அகிலனுக்கு அடுத்ததாக ஜெயகாந்தன் சாகித்திய அகடமி விருது பெற்று தமிழுக்கும், தமிழகத்திற்கும் கவுரவம் ஏற்படுத்தியிருக்கிறார். மிகவும் கண்டிப்பானவர், எளிதில் கருத்துக்களை மாற்றிக் கொள்ளாதவர், இயல்பாக மட்டும் அல்ல அழுத்தமாகவும் கருத்துக்களை பதிய வைப்பவர் என்று எல்லாராலும் வர்ணிக்கப்படும் இந்த எழுத்தாளர் தென்கிழக்காசிய நேயர்களுக்காக வானொலியில் பேட்டி அளித்தார். தமிழ் ஆர்வலரான ஜெ.ராதாகிருஷ்ணன், ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பேட்டி கண்ட போது அதில் பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார் ஜெயகாந்தன். சில கேள்விகளுக்கு அவர் அளிக்கும் ஒளிவுமறைவற்ற பதில்கள் தமிழ் எழுத்தாளர்களில் தனி முத்திரை பதித்த அவர் குணாதிசயத்தை பிரதிபலிக்கிறது.

எழுத்தாளர் ஜெயகாந்தன் அளித்த பேட்டி:

* ராதாகிருஷ்ணன்: எழுத்தாளர்கள் எல்லாம் தங்களுக்கென்று ஒரு புனைப்பெயர் வைத்துக் கொள்வார்களே? ஜெயகாந்தன் என்பது உங்களது இயற்பெயரா அல்லது புனைப்பெயரா?

ஜெயகாந்தன்: இயற்பெயர் தான்.

* நீங்கள் அதிகமாக முறைசார்ந்த பள்ளிக்கூடங்களிலோ, கல்வி நிலையங்களிலோ சென்று படித்தவர் அல்ல. சொல்லப் போனால் நீங்கள் 12 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக நீங்கள் எழுதிய பல நுல்களிலிருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் பண்டைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டி எழுதி இருக்கிறீர்கள். இத்தகைய விசாலமான தமிழ் அறிவை எங்கிருந்து பெற்றீர்கள். உங்களது தமிழ் ஆசான் யார்?

ப: எனக்கு ஆசான், குரு எல்லாம் மகாகவி பாரதியார் தான். ஆகவே பள்ளிக்கூடத்திற்கு போகாவிட்டாலும் படிக்க முடியும் என்பதற்கு நான் உதாரணம். சங்க இலக்கியங்கள் எல்லாம் படிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லாது இருந்தது. எனக்கு தமிழ் தெரியும். தமிழில் எனக்கு தோன்றியவற்றை நான் எழுதினேன். உலக இலக்கியங்களோடு நான் பரிச்சயம் கொண்டேன். அந்த வகையில் பழைய தமிழ் இலக்கியங்களோடு பரிச்சயம் கொள்ள வேண்டும் என்கிற சுயமுயற்சியினால், பிற்காலத்தில் சங்க இலக்கியங்கள் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன் ஒழிய, நான் ஒன்றும் பண்டிதன் அல்ல.

* நீங்கள் பல காலம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திலே ஆர்வமாக ஈடுபட்டிருந்தீர்கள்? பிறகு ஒரு காலகட்டத்திலே நீங்கள் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டீர்கள்? நீங்கள் ஏன் அவ்வாறு வெளியேறி வீட்டீர்கள் ?

ப: நான் அங்கே போனது ஏதோ வாழ்க்கையில் நேர்ந்ததே தவிர, எல்லாம் படித்து தேர்ந்து கட்சிப்பணி செய்ய வேண்டும் என்று போகவில்லை. போன இடத்திலே அந்த பணியை செய்ய வேண்டி இருந்தது. அதை குறைவில்லாமல் செய்து முடித்தேன். ஆனாலும் ஒரு ஸ்தாபனத்தோடு சேர்ந்து இருப்பதற்கும், ஒரு கலைஞன் என்ற முறையிலே சில தனிப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பதற்கும்,சில முரண்பாடுகள் தோன்றின. எனவே, அவர்களின் சம்மதத்தோடு, ஆசீர்வாதத்தோடு நான் கட்சியிலிருந்து வெளியே வந்து எனது கட்சிப் பணியை தொடங்கினேன்.

* கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பு கொண்ட ஒரு நபர் என்கிற முறையிலே, இன்றைய உலகிலே கம்யூனிச வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள் ?

ப: கம்யூனிஸ்ட் தான் காரணம். அவர்களுடைய முயற்சி தோல்வி அடைந்து விட்டதனால் அந்த சித்தாந்தமே வீழ்ச்சி அடைந்து விட்டதாக நான் கருதவில்லை. அது
* “தமிழ் நமக்கு தாய்மொழி. பிறமொழி கலப்பு இல்லாமல் தமிழில் எழுத விரும்புபவர்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவ விருப்பம் உள்ளவர்கள் அல்ல. சமஸ்கிருதமும் ஒரு உயர்வான மொழி தான்’ என்று தாங்கள் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறீர்கள். அப்படி நினைப்பது ஏன் ?

ப: முதலில் என்னைப் பற்றி நிறைய வதந்திகள் உண்டு. நான் எழுதியவற்றில் நீங்கள் சொன்ன கருத்து ஏதாவது இருந்தால் நான் அதற்கு பதில் சொல்வேன். நீங்கள் அங்கே அப்படி சொன்னீர்களாமே? இங்கே இப்படி சொன்னீர்களாமே? என்று சொல்வதெல்லாம் காசிப் (வதந்தி). தமிழ் மீது எனக்கு இருக்கிற அபிமானம் அவர்களுக்கு எல்லாம் இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.

* “”நான்மறை என்று சொல்லப்படுகின்ற ரிக், யஜுர், சாம, அதர்வணம் போன்றவை வேதங்களே அல்ல. மாறாக தமிழுக்கே உரித்த திராவிட நான்கு வேதங்களைக் குறிக்கின்றது” என்று தமிழறிஞர்கள் சொல்லி இருப்பது பற்றி தங்களது கருத்து என்ன?

ப:இதை நான் கேள்விப்படவே இல்லை. இதைப்பற்றி நான் நினைக்க என்ன இருக்கிறது.

* ஒரு தமிழ் அறிஞர் என்கிற முறையிலே தங்களது கருத்தை இதில் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.

ப: இந்த பூ சுற்றுதல் வேலை எல்லாம் என்னிடம் நடக்காது. நான் தமிழ் அறிஞர் அல்ல.

* செம்மொழி ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்து இருக்கிறது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான மொழியையே செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டுமென்ற கூக்குரல் தற்போது தமிழகத்தில் சமீப காலமாக பேசப்பட்டு வருகிறது. இதைப்பற்றி தங்களது கருத்து என்ன?

ப:நீங்கள் தான் சொன்னீர்களே? அது கூக்குரல் என்று. கூக்குரல் பற்றி எல்லாம் நான் என்ன அபிப்ராயமா சொல்லிக் கொண்டிருக்க முடியும். தமிழ் ஒரு செம்மொழி என்பதற்கு சந்தேகமே இல்லை. தமிழ் தொன்மை வாய்ந்ததா என்பதற்கு ஆயிரம் வருடமா, இரண்டாயிரம் வருடமா என்கிற கணக்கு எல்லாம் எனக்கு தெரியாது.

* இலக்கிய படைப்புகளின் நோக்கம்,
ப: பொதுவாக இலக்கியங்கள் நோக்கம் என்ன என்று தாங்கள் தெரிந்துக் கொண்டால், இந்த கேள்வியையே என்னிடம் கேட்டிருக்க மாட்டீர்கள். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம். இது எல்லாம் இலக்கியத்தின் நோக்கம். அப்படி இல்லை என்றால் அது ஒரு பூதக்கண்ணாடியாகவோ, அல்லது எக்ஸ்ரே கண்ணாடியாகவோ இருக்கலாம். அந்தந்த படைப்பாளியின் படைப்புத் திறனைப் பொறுத்தது.

* தாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக அவ்வளவாக எழுதுவது இல்லை. ஆனால் இன்றைய காலகட்டத்திலே கணினிகளும், இன்டெர்நெட்களும், மொபைல் தொலைபேசிகளும், வீட்டுக்கு வீடு புகுந்து விட்ட கேபிள் “டிவி’க்களும் மற்றும் தாராளமயமான பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம்
ப: ஏற்கனவே பிடித்து இருக்கிறேன் நிறைய. அதெல்லாம் ஒன்றும் செத்துப் போகாது. எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன? நீங்கள் தான் அவர்கள் எழுதியவற்றை படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

* தங்களது திரைப்பட அனுபவம் பற்றி கூறுங்கள்?

ப: ரொம்ப சுவாரஸ்யமான இருந்தது. நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். நல்ல முயற்சி. எனக்கு அதிலே திருப்தி தான்.

* நீங்கள் இயக்கிய மூன்று படங்களுமே விருது படங்கள் என்று நினைக்கிறேன்?

ப: ஓடாத படங்கள் எல்லாம் விருது படங்கள் தான்.

* நீங்கள் உங்கள் கதைகளை மட்டுமே படம் பிடித்து இருக்கிறீர்களா? மற்றவர்களின் கதைகளையும் படம் பிடித்திருக்கிறீர்களா?

ப: நான் என்னுடைய கதைகளை மட்டுமே படம் பிடித்து இருக்கிறேன்.

* தாங்கள் இலக்கியத் துறையிலே ஈடுபட்டிருந்த 60 80களிலும், தற்போது 2005ம் ஆண்டிலும் தமிழ் சமுதாயம் எப்படி இருக்கிறது? ஏதாவது மாற்றங்கள் தெரிகிறதா?

ப: இதற்கெல்லாம் சென்சஸா எடுக்க முடியும். வாசகர்களும், எழுத்தாளர்களும் நிறைய பெருகி உள்ளனர். படைப்புகளும் நிறைய பெருகி இருக்கின்றன. இது எல்லாம் ஆரோக்கியமான அம்சங்கள் தான்.

* தாங்கள் இந்த விருது வேறு எந்த எழுத்தாளருக்காவது கிடைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

ப: நான் அவ்வாறு எல்லாம் ஒன்றும் நினைக்கவில்லை. விருதுகளைப் பற்றியே நான் நினைப்பது இல்லை.

* குடியரசுத் தலைவர் இளைஞர்களை சந்திக்கும் போது எதிர்காலத்தை நீங்கள் எதன்பொருட்டு வைத்துக் கொள்வீர்கள் என்று கேட்பார். அந்த கேள்வியை நான் இப்பொழுது உங்களிடம் கேட்டால் தாங்கள் என்ன சொல்வீர்கள்?

ப: நான் இளைஞன் இல்லை என்று சொல்வேன்.

* தாங்கள் இளைஞர்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் சொல்ல விரும்பும் அறிவுரை ஏதேனும் இருக்கிறதா?

ப: பொதுவாக நான் அறிவுரை சொல்வது இல்லை. யாரும் கேட்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.

* இன்றைய தமிழ் எழுத்தாளர்களில் தங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்?

ப: சொன்னால் வம்பு. இன்றைய எழுத்தாளர்களைப் பற்றி நாளைக்கு தீர்மானிப்பது தான் சரியாக இருக்கும். இன்றைக்கே தீர்மானிப்பது நம்முடைய விருப்பு, வெறுப்பு காட்டுவதாக அமையும்.

* இன்று நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் சில எழுத்தாளர்களின் பெயரைச் சொல்ல முடியுமா?

ப: இதெல்லாம் வாசகர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.

* பிற மொழி எழுத்தாளர்களில் தங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்?

ப: எழுத்து தான் என்னைக் கவருகிறது. சில சமயங்களின் எழுத்தாளர்களின் பெயரும் எனக்கு மறந்து போகிறது.

* உங்களது படைப்பை பலர் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். உங்கள் படைப்பை மொழிபெயர்த்து இருக்கும் ஆங்கில எழுத்தாளர் பெயரை சொல்ல முடியுமா?

ப: டாக்டர் கே.எஸ்.சுப்ரமணியம், இந்தியில் சவுரிராஜன். இப்பொழுது பாலசுப்ரமணியம். மொழிபெயர்ப்பதினால் எனக்கு அவர்களைப் பிடிக்கிறது.

* ஜெயகாந்தன் என்றாலே மிகவும் கோபப்படுகிறவர் என்று இளைஞர்கள் மத்தியில் ஒரு அபிப்ராயம் இருக்கிறது. “ரவுத்திரம் பழகு’ என்பதை தாங்கள் எவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்கிறீர்கள்?

ப: சில சமயங்களில் தான் கோபம் உண்டாகிறது. அது உங்களுக்கும் வரலாம். மேன்மையான குணங்களை எல்லாம் மறந்து விடுவோமோ என்கின்ற பயத்தினால் தான் பாரதியார் ‘ரவுத்திரம் பழகு’ என்று சொன்னார்.

* எழுத்தாளனின் பேனா முனை, துப்பாக்கியை விட வலிமையானது என்று சொல்கிறார்கள். ஜனநாயக சமுயதாயத்தில் எழுத்தாளர்களினால் எவ்வளவு துõரம் மாற்றத்தினை கொண்டுவர முடியும் என்று நினைக்கிறீர்கள்?

ப: மாற்றத்தைக் கொண்டு வருவது அல்ல. மாறுகின்ற விஷயங்களைக் குறித்து அவர்கள் கோடிட்டுக் காட்டுகின்றனர்.

* “ஹரஹர சங்கரா’ என்கின்ற நுõலை திடீரென்று 15 ஆண்டுகள் கழித்து எழுதினீர்கள்? இவ்வளவு ஆண்டுகள் கழித்து தாங்கள் எழுதுவதற்கு துõண்டுகோலாக அமைந்தது எது?

ப: எழுத்து என்பது எப்படி வேண்டுமானாலும் வரும். அது திடீரென்று வந்ததா என்று எனக்கு தெரியாது. எழுதுவது என்பது திடீரென்று ஒன்றும் வரவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு “ஜெயஜெயசங்கரா’ என்ற ஒன்றை எழுதி இருக்கிறேன். அவருடைய வாழ்க்கையின் மீது எனக்கு இருக்கின்ற ஈடுபாடு தான் காரணம். அது ஒரு கற்பனை என்பதையும் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பதையும், கற்பனையையும் போட்டுக் குழப்பிக் கொண்டால் மிகவும் விபரீதமாக முடியும்.

* தனிமனித ஒழுக்கம் என்பதை வைத்து தான் பெரும்பாலான கதைகள் அமைகிறதா? அது தனிமனித ஒழுக்கத்தை எவ்வளவு துõரம் பாதிக்கிறது?

ப: பாதிப்பது என்றால் நல்லவிதமாக இருக்கலாமே? ஆரோக்கியமாகவும் அது பாதிக்கலாம். ஆரோக்கியத்துக்கு எதிராகவும் பாதிக்கலாம். அந்த பாதிப்பு நிகழ்வது மனிதர்களால் தான்.

* குடியரசுத் தலைவர் தாங்கள் எழுதிய “ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ என்பதைப் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசினார். தங்களது படைப்புகளில் அது தான் தலையாய படைப்பு என்று நினைக்கிறீர்களா? உங்களுக்குப் பிடித்த புத்தகம்?

ப: குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட அந்த புத்தகம் எனக்கும் பிடிக்கும். நான் எனக்குப் பிடித்தவற்றை மட்டும் எழுதுகிறேன். அதில் எனக்கு வித்தியாசம் இல்லை. குடியரசுத் தலைவருக்கு அந்த நுõலைப் பிடித்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

இவ்வாறு ஜெயகாந்தன் பரபரப்பாக பேட்டி அளித்தார்.

Credits – Dinamalar

2 thoughts on “பல்வேறு கருத்துக்கள் பற்றி ஜெயகாந்தன் பதில்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s