ஒரு காதல் கதை – அத்யாயம் 1 & 2

இந்தக் கதை மரத்தடி.கொம் இணையத்தளத்தில், ஒரு காதல் கதை என்ற தலைப்பில் குந்தவை வந்தியத்தேவன் என்ற பெயரில் நான் எழுதி வெளிவந்தது.
அச்சு நேர்த்திக்கு பெயர்பெற்ற மரத்தடி.கொம் இல் வந்ததால். அந்த அச்சு நேர்த்தியை பயன்படுத்திக் கொண்டுள்ளேன். இதற்காகவும் என் தொடர்கதையை பதிப்பித்தமைக்காகவும் மரத்தடி.கொம் இற்கு நன்றிகள்.

அத்யாயம் 1

பளீரென்று அவள் கன்னத்தில் அறைந்து என் வாழ்நாளில் என்றுமே சொல்லியிராத ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி அவளைத் திட்டினேன். பிறகு, “மரியாதையா நடந்துக்கோ, தெரிஞ்சத மட்டும் பேசு” என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தேன்.

ராத்திரி முழுக்க தூக்கம் வரவில்லை; அன்றைய நாளின் ஞாபகங்கள் மீண்டும், மீண்டும் வந்து கழுத்தை நெரித்தது. கோடை விடுமுறையின் கடைசி பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட நான் அன்றைய தலைப்பில் மிக அருமையாகப் பேசி, காந்தி, பாரதி, கண்ணதாசன், பாரதிதாசன் இவர்களின் கருத்துக்களையும் இடையிடையே இட்டு, ‘என் சிறுநீரைக் குடித்தால் உனக்கு விடுதலை தருகிறேன்’ என்று சொன்ன அமெரிக்க சார்பு பொலிவிய அரசிடம், ‘என் தலை மயிறு கூட அந்த சுதந்திரத்தை ஏற்காது’ என்று சொல்லி இறந்து போன செகுவாராவின் கருத்துக்களைச் சொல்லி முடிக்கும் பொழுது அரங்கம் அதிரும் கரவொலி.

ஆனால் பின்னால் வந்து பேசிய அவளை அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை, பெரும்பாலும் கல்லூரிக்கிடையிலோ அல்லது பள்ளிகளுக்கிடையிலோ நடக்கும் பேச்சுப்போட்டிகளில் மிகவும் தெரிந்த நண்பர்களே பங்குகொள்வார்கள். ஆனால் இந்தப் பேச்சுப்போட்டி எல்லோருக்கும் உரியது. அதாவது யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். நான் பேசி முடித்தபின் மேடையேறிய அவள் முதல் வரியிலேயே, “முன்னால் பேசிவிட்டு போனாரே ஒருவர், அவரை நேற்று ஒரு பெட்டிக்கடையருகில் கையில் சிகரெட்டுடன் பார்த்தேன், இவரும் இவர் நண்பர்களும் சேர்ந்து அங்கு போகும் பெண்களை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள், இப்படிப்பட்ட இவருக்கு செகுவாராவைப் பற்றி பேச அருகதையே இல்லை!” என்று சொல்ல, பேச்சுப்போட்டி நடந்த இடம் ஒரு பெண்கள் கல்லூரியாதலால் பலத்த கரகோஷம், அதன் பின்பு அவள் தலைப்பிலும் பேசினாள்.

அவள் பேசிவிட்டு மேடையை விட்டுக் கீழிறங்கும் போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. பெண்களை மதிக்கும் நான், எப்படி அப்படி நடந்து கொண்டேன் என்றே தெரியவில்லை.

காலையில் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன், அவளும் அங்கே வந்தாள், நேரே அவளிடம் போனேன்.

“உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்.”

நான் சொன்னதும், கொஞ்ச தூரம் நகர்ந்து வந்த அவள், “ம்ம்ம்ஸ் சொல்லுங்கள்.”

“என்னை மன்னிச்சிருங்க, நேத்து கோபத்திலே திட்டிட்டேன், அந்த வார்த்தை சொல்லி திட்டியிருக்க கூடாதுதான், ஆனால் சொல்லிட்டேன், தயவுசெய்து மன்னித்து விடுங்கள்!” என்று சொல்லிவிட்டு அவளையே பார்த்தேன்.

“நேத்திக்கு நீங்க என்னவோ திட்டினீர்கள் என்று தெரியும், ஆனா சத்தத்துல என்ன சொன்னீங்கன்னு கேட்கலை, பரவாயில்லை, எம்மேலையும் தப்பிருக்கிறது, நீங்க சாதாரணமா எடுத்துப்பீங்கன்னு நினைச்சேன். நீங்க கோபமாய்ட்டீங்க, ஆமா உங்களுக்குத்தான் முதல் பரிசு கொடுத்தாங்க, ஆனா வாங்க நீங்க வரலையே?” என்று கேட்டாள்.

“இல்லை மனசு சரியில்லை, அதான் வாங்கலை, அது ஒன்னும் பிரச்சனையில்லை, தயவு செய்து என்னை மன்னிச்சிருங்க!” என்று சொல்லிவிட்டு அவளைவிட்டு நகர்ந்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் எங்கள் கல்லூரிப்பேருந்து வந்து நின்றது, நாங்கள் ஏறி அமர்ந்து கொண்ட சிறிது நேரத்தில் அவளும் வந்து அமர்ந்தாள். என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லை, உடனே சார்லஸிடம், ‘டேய் யார்ரா அவ? நம்ம காலேஜா?’

‘யாருக்குத் தெரியும், ஃபர்ஸ்ட் இயரா இருக்கும், நம்ம பஸ்ல ஏற்றான்னா நம்ம காலேஜாத்தான் இருக்கும்.’

அய்யோ இந்த விஷயம் இத்தோடு முடிஞ்சிரும்ன்னு பார்த்தா முடியாது போலிருக்கே, இன்னும் ஒரு வருஷம் இவளோட குப்பை கொட்டணுமான்னு நான் நினைச்சேன். ஆனால் வாழ்க்கை வேறு விதமாக நினைச்சிருச்சு.

அத்யாயம் 2

அன்று என் கல்லூரியில் புதிதாக சேர்வதற்காக மாணவர்கள் வரும் நாள், ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது எங்கள் கல்லூரி நிர்வாகம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்பதால் நடத்தும் பொறுப்பு எங்களுக்கு. எல்லா ஏற்பாடுகளும் ஒரு வாரத்திற்கு முன்பே முடிந்திருந்தது. சில கடைசி நேர விஷயங்கள் பாக்கியிருந்தன. இரண்டு மணிநேரக் கலைநிகழ்ச்சிகள், 90 சதவீத பொறுப்புகளை இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, நடத்துவதை மட்டும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஒரு வாரத்திற்கு முன்பே எல்லா நிகழ்சிகளையும் ரிகர்ஸல் பார்த்தாகிவிட்டது. மேடையும், நிகழ்ச்சியை நடத்துவதும் என் பொறுப்பில் இருந்தது.

காலையில் போனதுமே, பிரின்ஸிபால், “தாஸ், எல்லாம் முடிஞ்சிருச்சா, ஒன்னும் தப்பில்லையே. ஏடாகூடமாச்சுன்னா சேர்மன் கோச்சுக்குவார் பார்த்துக்கோ!”.

“இல்லை சார், எல்லாம் சூப்பராக வந்திருக்கு, இந்த வருஷம் அசந்திரப் போறீங்க பாருங்க,” என்று சொன்னேன்.

நிகழ்ச்சிகளெல்லாம் நன்றாக நடந்தது, சொல்லப்போனால் மற்ற ஆண்டுகளைவிட மிகச் சிறப்பாக இருந்தது, மற்ற ஆண்டுகளில் ரிகர்ஸல் பார்க்காமல் வந்து விடுவார்கள்; அதனால் கடைசிநேரக் குழப்பங்கள் இருக்கும், இது தெரிந்துதான் நான் எல்லா நிகழ்சிகளுக்கும் ரிகர்ஸல் தரவேண்டும் என்று கட்டாயமாகக் கூறிவிட்டேன், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் நன்றாகச் செய்திருந்தார்கள், ஆக மொத்தம் எல்லாம் சிறப்பாக நடந்தது.

வாழ்த்துரை கூறவந்த சேர்மன், ரொம்ப சந்தோஷமாகி மேடையில் நின்று கொண்டிருந்த என்னை அருகில் அழைத்து, “இவரு மோகன், மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவன், வருஷாவருஷம், இவர் மற்றும் இவரோட குழுவால் கல்லுரிக்கு நிறைய பரிசு, நிறைய கேடயங்கள், நல்ல பேரு கிடைச்சுக்கிட்டிருக்கு, எனக்குத் தெரியும் இந்த வருஷம் விழா நல்லாயிருக்குமுன்னு. புது மாணவர்களாகிய நீங்கள் இவரை மாதிரித்தான் வரணும். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இவரை நீங்க கேட்கலாம்,’ அப்பிடின்னு ஒரே பாராட்டு மழை.

அப்புறம் “உங்கள்ளேர்ந்து (புதிய மாணவர்களிடம்) ஒருத்தர் வந்து விழா எப்படியிருந்தது. நீங்கள் கல்லூரிகிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்றீங்கன்னு சொன்னீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்!” சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்த புதிய மாணவர்களைப் பார்த்தார். நானும் அப்போதுதான் அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தேன். மூன்றாம் நான்காம் வரிசையில் உட்கார்ந்திருந்த அவள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.

கொஞ்ச நேரம் யாருமே வரவில்லை, கடைசியில் நான் நினைத்ததைப் போலவே அவள் தான் மேடையேறி வந்தாள்.

நிகழ்ச்சிகள் நன்றாக இருந்ததாகவும், சீனியர்கள், ஜூனியர்களுக்கு உதவினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் கூறிவிட்டுச் சென்றாள். நன்றியுரை கூறவந்த நான் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு (அவளையும் சேர்த்து), ‘நானும் சீனியர் என்பதால் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவுவதாக’க் கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தேன்.

நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே அவள் என்னிடம் வந்து அப்படிப்பட்ட ஒன்றை கேட்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.

(தொடரும்…)

2 thoughts on “ஒரு காதல் கதை – அத்யாயம் 1 & 2

  1. order i mathunga mohandoss…part 1 & 2 i padichittu adutha part ku meala poga vendi iruku.is there a way to reverse the order of ur posts?/

  2. அட மக்கா!!! அடுத்து என்னப்பு!!!!!

    என்னை கேக்க வச்சுட்டியே !!!

    ஹும்

    குமரன்@முத்தமிழ்மன்றம்.கொம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s